சென்னை: எவலெஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரம் ஏறி சாதனை படைத்த திருநெல்வேலி பள்ளி மாணவி துணை முதல்வரிடம் வாழ்த்து பெற்றார். திருநெல்வேலியைச் சேர்ந்த 6 வயது பள்ளி மாணவி லலித் ரேணு. இவர் தனது தந்தை ஸ்ரீதர் வெங்கடேஷுடன் சேர்ந்து மலையேற்ற பயிற்சி பெற்று வருகிறார்.
அவர் 6,000 அடி உயரம் உடைய வெள்ளியங்கிரி மலை முதல் 30-க்கும் மேற்பட்ட பல்வேறு மலைகளில் மலையேற்றம் மேற்கொண்டுள்ளார். அண்மையில் அவர் எவரெஸ்ட் சிகரத்தில் 5,364 மீட்டர் உயரம் ஏறி, அடிவார முகாமை அடைந்து சாதனை படைத்தார்.
சாதனைகள் படைக்க வாழ்த்து: இந்நிலையில், மாணவி லலித் ரேணு நேற்று தலைமைச் செயலகத்தில் தனது பெற்றோருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். மலையேற்றத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ள அச்சிறுமியை துணை முதல்வர் பாராட்டியதோடு அவருக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கேடயத்தை வழங்கினார். மலையேற்றத்தில் தொடர்ந்து பல சாதனைகள் படைக்கவும் வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் – செயலர் ஜெ.மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.