சென்னை எழும்பூர் ஈவெரா சாலை முதல் சென்னை உயர் நீதிமன்றம் வரை பாரம்பரிய கட்டிடங்கள் நிறைந்த வழித்தடமாக அறிவிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஐரோப்பியர்களின் வருகையால் பொருளாதார தலைமை பீடமாக சென்னை வளர்ந்தது.
காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவின் முதல் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டதும் சென்னை தான். ஐரோப்பியர்களின் வருகை, காலனி ஆதிக்கத்தின் சுவடுகளாக இன்றும் பாரம்பரிய கட்டிடங்கள் சென்னை மாநகரை அலங்கரித்துக்கொண்டு இருக்கின்றன. இக்கட்டிடங்கள் வரலாறு, சமூக கலாச்சார மதிப்பு, வடிவமைப்பு, கட்டுமான பொருட்களின் பயன்பாடு போன்றவற்றின் அடிப்படையில் கட்டிடக் கலை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.
ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற பாரம்பரிய இடங்கள் குறித்து, இன்றைய தலைமுறைகள் தெரிந்துகொள்ள ‘ஹெரிடேஜ் வாக்’ நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அதுபோல இந்திய பகுதிகளில் அவ்வளவாக நடத்தப்படுவதில்லை.
அதனால் மாநகராட்சி சார்பில் பாரம்பரிய கட்டிடங்கள் நிறைந்த எழும்பூர் ஈவெரா சாலை முதல் பாரிமுனை வரையிலான சாலை மற்றும் பாரிமுனையில் இருந்து காமராஜர் சாலை வரை பாரம்பரிய கட்டிடங்கள் நிறைந்த வழித்தடமாக அறிவிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
அதற்காக இந்த சாலைகளை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக எழும்பூர் ரயில் நிலையம் முதல் ஈவெரா சாலை வழியாக பாரிமுனை வரையிலான வழித்தடத்தை மாநகராட்சி தேர்வு செய்துள்ளது. இந்த சாலையில் எழும்பூர் ரயில் நிலையம், புனித ஆண்ட்ரூ ஆலயம், ரிப்பன் மாளிகை, விக்டோரியா பொது அரங்கம், சென்னை சென்ட்ரல், சென்னை உயர்நீதிமன்றம் ஆகிய பாரம்பரிய கட்டிடங்கள் அமைந்துள்ளன.
இக்கட்டிடங்களின் பாரம்பரிய முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும், வருங்கால தலைமுறையினருக்கும் எடுத்துக்காட்டும் வகையில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ரிப்பன் மாளிகை எதிரில் உள்ள பூங்கா ரயில் நிலைய சுவற்றில் ரூ.11.21 லட்சம் செலவில் பாரம்பரிய கட்டிடங்களின் ஓவியங்களை வரைய மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் கூறியதாவது: சென்னை மாநகரின் முக்கிய அடையாளமாக இருந்து வரும் பாரம்பரிய பழமையான கட்டிடங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை நகரத்தின் பண்பாட்டையும், கட்டிடக்கலை மரபையும் பிரதிபலிக்கின்றன. இதை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்த மாநகராட்சி முயற்சி மேற்கொண்டுள்ளது.
அதற்காக, ஈவெரா சாலையில் உள்ள ரிப்பன் மாளிகை எதிரில் பாரம்பரிய கட்டிடங்கள் குறித்த சுவரோவியங்கள் வரைய இருக்கிறோம். அதனை தொடர்ந்து, பாரம்பரிய சின்னங்கள் குறித்த விழிப்புணர்வு கருப்பொருளுடன் சுவரோவியங்கள் வரைதல், அறிவுப்பலகைகள் நிறுவுதல் உள்ளிட்ட புதுப்புது யோசனைகளுடன் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியில் செயல்படுத்த வரும் நிறுவனங்கள் வரவேற்கப்படுகின்றன.
அவற்றால் முடிந்த முயற்சிகளை இந்த வழித்தடத்தில், விதிகளுக்கு உட்பட்டு செய்யலாம். எழும்பூர் முதல் பாரிமுனை வரையிலான வழித்தடத்தை மேம்படுத்திய பிறகு, மெரினா காமராஜர் சாலை வழித்தடம் மேம்படுத்தப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.