டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டி அதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் பெரம்பலூரில் நேற்று மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியது: டிஎன்பிஎஸ்சி சார்பில் 3,937 காலி பணியிடங்கலுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கு 15.52 லட்சம் பேர் விண்ணப்பித்து தேர்வெழுதினர். இந்தத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.
கேள்விகள் ஆங்கில வழியில் எளிமையாகவும், தமிழ் வழியில் கடினமாகவும் இருந்தன. 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாட புத்தகங்களில் இருந்து கேள்வி கேட்கப்படும் என அறிவித்துவிட்டு, மற்ற பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டது ஏன்?. இந்த முறைகேட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அரசு என்ன பதில் கூறப்போகிறது?. அதே வேளையில், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் எளிதில் வேலை கிடைக்கவில்லை.
பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேரும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 60 ஆயிரம் பேரும் பணி நியமனத்துக்கு காத்திருக் கின்றனர். அறநிலையத் துறை, மின்துறை, வனத் துறையில் ரூ.7 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை லஞ்சம் வாங்கி கொண்டுதான் பணியில் அமர்த்தப்படுகின்றனர். காவல் உதவி ஆய்வாளர்கள் பணியில் 900 பேரில் 400 பேர் லஞ்சம் வாங்கிக் கொண்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த முறை கேட்டுக்கு யார் காரணம்?. முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்யும்படி நீதிமன்றம் உத்தரவிட்டும், கருணை அடிப்படையில் மீண்டும் பணி யில் சேர வாய்ப்பு ஏன் கொடுக்க வேண்டும்?. தேர்வில் தோல்வி அடைந்த பலரும், தமிழகத்தின் மையப் பகுதியில் போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறினர்.
எனவே, பெரம்பலூரைத் தேர்வு செய்தேன். தவெக தலைவர் விஜய் வந்து சென்றதால் இந்த இடத்தைத் தேர்வு செய்யவில்லை. நான் ஏன் பிரச்சார சுற்றுப் பயணம் செல்லவில்லை என கேட்கின்றனர். தமிழகத்தில் எனக்கு தெரியாத ஊர்களே இல்லை. எங்கு மக்கள் பிரச்சினை இருந்தாலும் அங்கு நான் நிற்பேன். எனவே, எனக்கு சுற்றுப் பயணம் தேவையில்லை.
தவெக தலைவர் விஜய் என்னை விமர்சித்தார். எனவே, நான் அவரை விமர்ச்சிக்கும் நோக்கில் பல்வேறு கேள்விகளை கேட்கிறேன். ஆனால், அவரால் பதில் சொல்ல முடியவில்லை. குறைகூறுவதாக குற்றம் சாட்டுகிறார். அரசியலுக்கு வந்த பின்னர் அனைவரின் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டும். ஆனால், எழுதி வைத்து படிக்கும் விஜயால் எனது கேள்விக்கு பதில் அளிக்க முடியாது என்றார்.