மதுரை: மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பல ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்த மனுவில், “மதுரை தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என மத்திய அரசு 2018 ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. 2019-ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, ரூ.10 கோடியில் 5.50 கிலோமீட்டர் சுற்றளவில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. அதன் பிறகு தற்போது வரை கட்டுமானப் பணியைத் தொடங்கப்படவில்லை. எனவே, எய்ம்ஸ் கட்டுமானப் பணியை விரைந்து முடிக்க உத்தர விட வேண்டும்” என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளாட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. பல கட்டங்களாக பணிகள் நடைபெறுகின்றன.
50 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. முதல்கட்ட கட்டுமானப் பணிகள் வரும் ஜனவரி மாதம் முடிவடையும். ஜனவரி 26-ல் மருத்துவமனை கட்டிடம் ஒப்படைக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், “குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டுமானப் பணியை முடிக்க உத்தரவிட வேண்டும்” என்றார். இதையடுத்து நீதிபதிகள், “கட்டுமானப் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மருத்துவமனையை குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டி முடிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மனு முடித்து வைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.