புதுச்சேரி: எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோரின் குழந்தைகளுக்கு, பள்ளியில் படிப்போருக்கு ரூ.5,000, கல்லூரியில் படிப்போருக்கு ரூ.12,000 கல்வி உதவித் தொகையாக தரப்படவுள்ளது என்று கூறிய முதல்வர் ரங்கசாமி, எய்ட்ஸ் பாதித்தோரின் பயணப்படி ரூ.1000 ஆகவும் உயர்த்தப் படவுள்ளதாக கூறினார்.
நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் குறிப்பாக இளைஞர்களுக்கு எச்.ஐ.வி- எய்ட்ஸ் மற்றும் பாலியல் நோய் பற்றிய தகவல்களை தெரிவிக்கும் விதமாக விவேகானந்தர் பிறந்த நாளான சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, இன்று அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அந்தந்த மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கங்கள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டன.
அதன்படி, புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் இரண்டு மாத எச்ஐவி-எய்ட்ஸ் தீவிர விழிப்புணர்வு பிரச்சார துவக்க விழா கம்பன் கலையரங்கில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி விழிப்புணர்வு சுவரொட்டிகளை வெளியிட்டார். முன்னதாக கலைக்குழுவின் கூடிய பிரச்சார ஊர்தியையும் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியையும் முதல்வர் ரங்கசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
பின்னர் விழிப்புணர்வு நிகழ்வில் பேசிய முதல்வர் ரங்கசாமி கூறியதாவது: ”பள்ளி படிப்பை முடித்து கல்லூரி செல்லும் போது சில மாற்றங்கள் குழந்தைகளுக்கு ஏற்படும். சில தீய பழக்கங்கள் சிலரால் ஏற்படுவதை கட்டுப்படுத்த வேண்டும். போதை பழக்கத்துக்கு ஆளாகிவிடக்கூடாது. சிலர் பணக்காரராக குழந்தைகளை கெடுக்கிறார்கள்.
வாழ்க்கை நன்றாக வாழ உடல் நலன் சரியாக இருக்க வேண்டும். தீய பழக்கங்கள் நம்மை தீய வழிகளுக்கு அழைத்து செல்லும் என்பதால் உணர்ந்து, சுய ஒழுக்கம் எனும் பழக்கம் மூலம் நம்மை நாமே கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதேபோல், மாணவர்களுக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு தேவை. இந்திய அளவில் எய்ட்ஸ் பாதிப்பு 0.20 சதவீதம் ஆக உள்ளது. ஆனால், புதுச்சேரியில் 0.18 சதவீதமாக ஆக உள்ளது.
அண்டை மாநிலத்தவர் மருத்துவ வசதி பெற இங்கு வருகின்றனர். அதுவும் புதுச்சேரி கணக்கில் வரும். எச்ஐவி தொற்றில் உள்ளோர் 1,256 பேர் உள்ளனர். இந்த பாதிப்பு இன்னும் குறைய வேண்டும் என்பதே நமது எண்ணம்.
இந்நோயால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்கு 3 ஆயிரம் நிதி உதவி தரப்படவுள்ளது. நோய் பாதித்தோர் மருந்து பெற 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவமனை வர மருத்துவ பயணப்படி ரூ.400 ஆக இருந்தது. அதை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி தர முடிவு எடுத்துள்ளோம்.
எய்ட்ஸ் நோய் பாதித்தோருக்கு நல்ல சத்தான உணவு வழங்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து, ரூ.1,250 மதிப்புள்ள சத்துணவு பெட்டகம் வழங்கப்படவுள்ளது. எய்ட்ஸ் தொற்றுள்ள பெற்றோர்களின் குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு செலவுக்கு உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,பள்ளி அளவில் படிக்கும் மாணவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், கல்லூரி அளவில் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ரூ.12 ஆயிரமும் தரப்படும். எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களின் குடும்பத்துக்கு இறுதிச் சடங்கு நடத்த உதவி தொகையாக ரூ.15 ஆயிரம் தரப்படும். இது விரைவில் செயல்படுத்தப்படும்” என்று புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.