சென்னை: மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்க உள்ள மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று (ஜூலை 16) சந்தித்தார். அப்போது, மாநிலங்களவை உறுப்பினராக வரும் 25-ம் தேதி பதவியேற்க இருப்பது தொடர்பான ஆவணத்தைக் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்கவிருக்கும் என்னுடைய அருமை நண்பர் கமல்ஹாசனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் பதிவில், “புதிய பயணத்தை நண்பர் ரஜினிகாந்த் உடன் பகிர்ந்தேன். மகிழ்ந்தேன்.” என்று குறிப்பிட்டிருந்தார்.