சென்னை: மாநில அரசே எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கும் நிலையில், எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதற்காக `திஷா’ குழுவின் ஆய்வுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு (திஷா) குழுவின் 5-வது ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. தலைமைச் செயலர் நா.முருகானந்தம் வரவேற்றார். இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மத்திய அரசின் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் 45,312 சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ.67.97 கோடி, சமுதாய முதலீட்டு நிதியாக 75,127 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.801.62 கோடி, நலிவு நிலைக்குறைப்பு நிதியாக 13,546 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ரூ.75.73 கோடி வழங்கப்பட்டுள்ளது.
முதியோர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் பழங்குடியினரைக் கொண்டு 25,001 சிறப்பு சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 1 லட்சத்து 57,316 பேர் பயனடைந்துள்ளனர். 2025-26 பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த செப். 3-ம் தேதி வரை 1 லட்சத்து 46,100 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.13,062 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.1,274 கோடி நிதி வரப்பெற்று, 9,755 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 2,290 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன. தமிழகத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் நிதியாண்டுக்கு ரூ.3 கோடி வீதம், 234 தொகுதிகளுக்கும் ரூ.702 கோடி ஒதுக்கப்பட்டு, அடிப்படை, உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன. மாநில அரசே எம்எல்ஏக்களுக்கு ரூ.3 கோடி வழங்குவதால், எம்.பி.க்கள் நிதியை ரூ.10 கோடியாக உயர்த்த வேண்டும். இதை வலியுறுத்தி இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.
பிரதமரின் `ஒரு துளி நீரில் அதிக பயிர்’ என்ற திட்டத்தில் நுண்நீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு 55 சதவீதம் மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 45 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. ஆனால், திமுக அரசு கூடுதல் நிதி ஒதுக்கி 100 சதவீதத்தை சிறு, குறு விவசாயிகளுக்கும், 75 சதவீதம் மானியத்தை இதர விவசாயிகளுக்கும் வழங்கி வருகிறது. 12 சதவீத ஜிஎஸ்டியை தமிழக அரசே ஏற்கிறது. இந்த திட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 1 லட்சத்து 50,560 ஹெக்டேர் பரப்பில் 1 லட்சத்து 57,279 விவசாயிகள் ரூ.1,312 கோடிக்கும் அதிகமான நிதிப்பயன்களை பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 54,449 குழந்தைகள் மையங்களில் 22 லட்சம் குழந்தைகளுக்கும், 5.50 லட்சம் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்துமாவு வழங்கப்படுகிறது. இதனால் 25 சதவீதமாக இருந்த குழந்தைகளின் உயரக் குறைபாடு 11.8 சதவீதமாகவும், 14.6 சதவீதமாக இருந்த மெலிவுத் தன்மை 3.6 சதவீதமாகவும், 22 சதவீதமாக இருந்த குழந்தைகளின் எடை குறைவு 5.7 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இதுதவிர, ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தில் முதல்கட்டமாக 1 லட்சத்து 7,006 ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளில் 77.3 சதவீதம் பேரும், 2-ம் கட்டத்தில் 80.6 சதவீத குழந்தைகளும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர். மத்திய அரசு தனது நிதியை சரியான நேரத்தில் மாநில அரசுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.தொடர்ந்து, அமைச்சர்கள் துறை வாரியான திட்டங்கள் குறித்து விளக்கினர். குழுவின் உறுப்பினர்களாக உள்ள எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.