சென்னை: “மாநில அரசே எம்எல்ஏக்கள் தொகுதி மேம்பாடடு நிதியாக ரூ.3 கோடி வழங்கும் நிலையில், எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.10 கோடியாக மத்திய அரசு உயர்த்தி வழங்க வேண்டும்” முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் (திஷா) குழுவின் ஐந்தாவது ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: “தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவதை கவனமுடன் கண்காணித்து வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில் அக்கறையோடு அரசு செயல்பட்டு வருகிறது.
மத்திய அரசின், ‘தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம்’ 37 ஊரக மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 45,312 சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ.67.97 கோடி, சமுதாய முதலீட்டு நிதியாக 75,127 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.801.62 கோடியும், நலிவு நிலைக்குறைப்பு நிதியாக 13,546 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு ரூ.75 .73 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
முதியோர், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் மற்றும் பழங்குடியினரைக் கொண்டு 25,001 சிறப்பு சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் 1,57,316 பேர் பயனடைந்துள்ளனர். இவற்றில் 17,207 சிறப்பு சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25.81 கோடி சிறப்பு சுழல் நிதியாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், இன்று வரை மகளிர் சுய உதவுக் குழு உறுப்பினர்களுக்கு ரூ.1,25, 362 கோடி வங்கிக் கடன் இணைப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த 2025-26 ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த செப்.3 வரை1,46,100 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.13,062 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 2021-22-ம் ஆண்டு முதல் 2025-26 வரை ரூ.1,274 கோடி நிதி வரப்பெற்று 12,045 பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய சிறப்பான ஒத்துழைப்புடன் எடுக்கப்பட்டு 9,755 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 2,290 பணிகள் முன்னேற்றத்தில் உள்ளன.
தமிழகத்தில், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில், நிதியாண்டுக்கு ரூ.3 கோடி வீதம், மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ரூ.702 கோடி ஒதுக்கப்பட்டு அடிப்படை, உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகிறது. மாநில அரசே எம்எல்ஏக்களுக்கு ரூ.3 கோடி வழங்குவதால், எம்பிக்கள் நிதியை ரூ.10 கோடியாக உயர்த்த வலியுறுத்தி வருகிறோம். இதற்காக இக்கூட்டம் வாயிலாக, தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.
தற்போது‘ இ சாக்ஷி’ போர்ட்டலில் ஏஜென்சி ஒப்புதல் மற்றும் பிஎப்எம்எஸ் போர்ட்டலில் திட்ட செயலிழப்பு ஒப்புதலை மத்திய அரசே வழங்குவதால் காலதாமதம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க இப்பொறுப்பு “மாநில நோடல் ஏஜென்சிக்கு” வழங்கப்பட வேண்டும். அத்துடன், இ சாக்ஷி போர்ட்டலை மேம்படுத்தவும் மத்திய அரசை வலியுறுத்தப்படும்.
‘பிரதமரின் வேளாண் நீர்ப்பாசன திட்டம் – ஒரு துளி நீரில் அதிகப்பயிர்’ என்ற திட்டத்தில் நுண்நீர் பாசன அமைப்புகள் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 55 சதவீதம் விழுக்காடு மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 45 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது. ஆனால், திமுக அரசு கூடுதல் நிதி ஒதுக்கி, 100 சதவீதத்தை சிறு,குறு விவசாயிகளுக்கும் 75 சதவீதம் மானியத்தை இதர விவசாயிகளுக்கும் வழங்கி வருகிறது. 12 சதவீதம் ஜிஎஸ்டியையும் தமிழக அரசே ஏற்கிறது. இந்த ஊக்கத்தால் பயிர்களின் சாகுபடி பரப்பளவு அதிகரிக்கிறது.
இந்தத் திட்டத்தில், கடந்த 2 ஆண்டுகளில் 1,50, 560 எக்டேர் பரப்பில் 1,57,279 விவசாயிகள் ரூ.1,312 கோடிக்கும் அதிகமான நிதிப்பயன்களை பெற்றுள்ளனர். இந்தத் திட்டப்பயன்களை விவசாயிகளுக்குகொண்டு சேர்ப்பதில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.
“ஊட்டச்சத்து குறைபாடில்லாத குழந்தைகள் நிறைந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே” நமது முக்கிய நோக்கமாகும். தமிழகத்தில் 54,449 குழந்தைகள் மையங்களில் 6 மாதம் முதல் 6 வயது வரையிலான 22 லட்சம் குழந்தைகளுக்கு சத்துமாவு வழங்கப்படுகிறது. மேலும், 5.50 லட்சம் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சத்துமாவு வழங்கப்பட்டு தாய்-சேய் ஊட்டச்சத்து நடைமுறை கண்காணிக்கப்படுகிறது.
அரசின் முனைப்பான செயல்பாடுகளின் விளைவாக 25 சதவீதமாக இருந்த குழந்தைகளின் உயரக் குறைபாடு 11.8 சதவீதமாகவும், 14.6 சதவீதமாக இருந்த குழந்தைகளின் மெலிவுத் தன்மை 3.6 சதவீதமாகவும், 22 சதவீதமாக இருந்த குழந்தைகளின் எடை குறைவு 5.7 சதவீதமாகவும் குறைந்துள்ளது. குழந்தைகளின் வளர்ச்சி வீதம் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது.
இதுதவிர, “ஊட்டச் சத்தை உறுதி செய்” என்ற திட்டப்படிமுதற்கட்டமாக 1,07,006 ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளில் 77.3 சதவீதம் குழந்தைகள் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளனர். இரண்டாம் கட்டமாக அரியலூர் மாவட்டத்தில் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டு 80.6 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளனர்.
மத்திய அரசின் அனைத்து திட்டங்களிலும் மாநில அரசின் பங்குத் தொகை எவ்வித காலதாமதமுமின்றி விடுவிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், மத்திய அரசும் தனது நிதியை சரியான நேரத்தில் மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என இக்குழு மூலம் வலியுறுத்தப்படும்” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தொடர்ந்து, அமைச்சர்கள் துறைவாரியான திட்டங்களை விளக்கினர். குழுவின் உறுப்பினர்களாக உள்ள எம்பிக்கள், எம்எல்ஏக்கள் பேசினர் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.