பாளையங்கோட்டை: “தமிழகத்தில் எம்.ஜி.ஆருக்கு இருந்ததை காட்டிலும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மகளிர் ஆதரவு பெருகி வருகிறது” என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு கூறினார்.
பாளையங்கோட்டையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகம் கட்டுமானப் பணிகளை தமிழக சட்டப் பேரவை தலைவர் மு. அப்பாவு, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் நேரு கூறியது: “திருநெல்வேலியில் நடைபெற்ற பாஜக மாநாட்டில் பேசிய மத்திய அமைச்சர் அமித் ஷா, திமுகவை வேரோடு அழிப்போம் என்று சொல்லியுள்ளார்.
விவசாயத்தில் வேரோடு பிடுங்கி நட்டால்தான் பயிர் நன்றாக விளையும். கடந்த 15 ஆண்டுகளாவே வேரோடு பிடுங்கும் வேலையைதான் பாஜக பார்த்துக் கொண்டிருக்கிறது. பாஜக மாநாட்டில் நயினார் நாகேந்திரன் மிகப் பெரிய கூட்டத்தை கூட்டியுள்ளார். அவர்களது ஆசையை அவர்கள் சொல்லி வருகிறார்கள். எங்கள் ஆட்சி மீது பாஜக வைப்பது குற்றச்சாட்டு அல்ல, அவர்களது ஆசை. அமித் ஷா பேசிய இதே ஊரில் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம். அவர்கள் நினைப்பது நடக்காது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது இருண்ட ஆட்சியாக இருந்தது. அது அமித் ஷா கண்ணுக்கு தெரியவில்லை. தமிழகத்துக்கு இதுவரை அமித் ஷா 3 முறை வந்து விட்டார். இவ்வாறு வரும்போதெல்லாம் கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா சொல்கிறார். ஆனால், அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி எப்போதும் தனித்து ஆட்சி என்கிறார். இதற்கு அமித் ஷா, பழனிசாமி இருவருமே விளக்கம் சொல்லவில்லை.
முதல்வரை யார் எந்த பெயரை வைத்து அழைத்தாலும் மீண்டும் தமிழகத்தில் ஸ்டாலின்தான் முதல்வராக வரப்போகிறார். பொதுமக்கள் , மகளிர் மிகப்பெரிய ஆதரவை முதல்வருக்கு தந்து வருகின்றனர். எம்ஜிஆருக்கு மகளிர் அளித்த ஆதரவை தாண்டி இப்போது முதல்வருக்கு அவர்களது ஆதரவு பெருகிவருகிறது.
நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் திமுக ஆட்சி அமையும். தமிழகத்தில் திமுகவுக்கு போட்டியே கிடையாது. எதிரியாக யார் இருந்தாலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்” என்றார்.