‘என் விட்டுக்கே ரூ.12 ஆயிரம் மின்கட்டணம் வருகிறது’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டிய நிலையில், ‘உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்ட உங்களை எல்லோரும் புகழ்கிறார்கள்’ என மின்துறை அமைச்சர் சிவசங்கர் பதிலளித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் புதுக்கோட்டையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பழனிசாமி, ‘‘மின் கட்டணம் கடுமையாக உயர்ந்து விட்டது. என் வீட்டுக்கு ரூ.4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வரை வரும். ஆனால் தற்போது ரூ.12 ஆயிரம் வருகிறது’ என பேசியிருந்தார்.
இதுதொடர்பான செய்தி வலைதளங்களில் வெளியாகியிருந்தது. அந்த பதிவில் பலரும், ‘மின் கட்டண உயர்வுக்கு அதிமுக ஆட்சியில் உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதே காரணம்’ என விமர்சனம் செய்து இருந்தனர்.
பில்லை கொடுங்கள் சரிபார்ப்போம்: இந்நிலையில் அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட பதிவில். ‘‘கீழே இருக்கும் கமென்ட்களைப் பாருங்கள். உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்ட உங்களைப் புகழ்ந்து எல்லோரும் கமென்ட் இடுகிறார்கள். நான் அப்படி கமென்ட் செய்ய விரும்பவில்லை. சேக்கிழார், பில்லை கொடுங்கள் சரிபார்ப்போம்” என பதிவிட்டுள்ளார்.