விழுப்புரம்: என் மூச்சிருக்கும் வரை பாட்டாளி மக்கள் கட்சிக்கு நான்தான் தலைவர் என்று கட்சி நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறியதாவது: என் மூச்சிருக்கும் வரை பாட்டாளி மக்கள் கட்சிக்கு நான்தான் தலைவர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு தலைவர் பதவியை அவருக்கு (அன்புமணி) கொடுக்கிறேன் என்று கூறியதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். கடைசி வரை நான்தான் பதவியில் இருக்க வேண்டும் என்று 99 சதவீதம் பேர் கூறுகின்றனர்.
என் குடும்பத்தில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று நான் சொல்லிய வார்த்தையை, என்னால் காப்பாற்ற முடியவில்லை. தலித் எழில்மலை, பொன்னுசாமியின் செயல்பாடுகள் திருப்தி இல்லாததாலும், கட்சியின் மூத்த நிர்வாகிகள் வலியுறுத்தியதாலும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக 35 வயதில் அன்புமணியை நியமித்தேன்.
அந்தப் பதவியில் தாக்குப் பிடிக்க முடியாமல், இரண்டரை ஆண்டுகளில் அமைச்சரவையில் இருந்து வெளியே வந்து விடுகிறேன் என்றார் அன்புமணி. அவரிடம் தினமும் பேசி, எப்படி எல்லாம் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினேன். பின்னர், சுகாதாரத் துறையில் உலக அளவில் விருது வாங்கினார். ஆனால், தந்தையிடம் விருது வாங்க முடியவில்லை.
பாமக இளைஞரணித் தலைவர் பதவிக்கு பொருத்தமான நபர் நியமிக்கப்படுவார். பொதுக்குழுக் கூட்டம் முறையாக கூட்டப்படும். அன்புமணிக்கு நல்ல தந்தையாக, வழிகாட்டியாக இருந்திருக்கிறேன். தாய், தந்தையை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். மைக் மற்றும் பாட்டிலை தூக்கி வீசியவர், தற்போது பெற்றோரை மகிழ்ச்சியாக வைத்திருப்பதாகக் கூறுகிறார். மாமல்லபுரம் மாநாட்டுக்குப் பிறகு, அன்புமணியின் செயல்பாடுகள் மோசமாகிவிட்டன.
100 ஆண்டு இருப்பீர்கள் என்று கூறிவிட்டு, மார்பிலும், முதுகிலும் ஈட்டியால் குத்திக் கொண்டிருக்கிறார். தூக்க மாத்திரை போட்டால்கூட தூக்கம் வருவதில்லை. அந்த அளவுக்கு மன உளைச்சலும், வேதனையும் உள்ளது. அன்புமணியின் செயல்பாடுகளை நினைக்கும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.
சுயம்புவாக பாட்டாளி மக்கள் கட்சியை உருவாக்கிய நான், தருமபுரிக்குச் சென்றபோது, மைக் வைத்துப் பேசக்கூடாது, கூட்டத்தில் 200 பேருக்கு மேல் இருக்கக் கூடாது என்றெல்லாம் அன்புமணி கட்டளையிட்டார். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.