சென்னை: “உலகத்திலேயே, தந்தையை வேவு பார்த்த பிள்ளை இருக்கிறாரா என்றால், இருக்கிறார். என்னை அதுபோல் வேவு பார்த்திருக்கிறார்கள்” என்று அன்புமணி மீது பாமக நிறுவனர் ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில், இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் கூறியது: “உலகத்திலேயே தந்தையை வேவு பார்த்த பிள்ளை இருக்கிறாரா என்றால், இருக்கிறார். என்னை அதுபோல் வேவு பார்த்திருக்கிறார்கள். இது குறித்து காவல் துறையிடமும், சைபர் குற்றப்பிரிவு போலீஸாரிடமும் புகார் கொடுத்துள்ளோம். அந்தக் கருவியையும் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளோம். மேலும், நான் தனியாக தனியார் சிறப்பு அமைப்பு மூலமாகவும் விசாரணை நடத்தச் சொல்லியுள்ளேன். அவர்களும் விரைவில் அறிக்கை கொடுப்பார்கள்.
தேர்தல் நெருங்குவதால், கட்சியை பலப்படுத்த பாமகவின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு நான் ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்க 108 மாவட்டச் செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால், 100 மாவட்டச் செயலாளர்களை அன்புமணி போனில் அழைத்து, கூட்டத்துக்கு போகவேண்டாம் எனச் சொல்லி நிறுத்தினார்.
இப்போது, பாமகவின் மகளிர் அணி மாநாடு வரும் 10-ம் தேதி நடைபெற இருக்கிறது. இதில், 3 லட்சம் மகளிர் பங்கேற்க இருக்கிறார்கள். பொதுவாக ஒரு பொதுக்குழு கூட்ட வேண்டும் என்றால் 15 நாட்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டு, கட்சித் தலைமையிடம் அனுமதி பெற்று நடத்த வேண்டும். அன்புமணி நடத்தும் பொதுக்குழு, நடைபயணம் அனைத்தும் பாமகவின் விதிகளுக்கு எதிரானது” என்றார் ராமதாஸ்.
பாமக பொதுக்குழு கூட்டம்: ராமதாஸ், அன்புமணி போட்டி அறிவிப்பு – முன்னதாக, பாமக தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாமக நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸ் உத்தரவுபடி, திண்டிவனம் – புதுச்சேரி செல்லும் வழியில் உள்ள பட்டானூர் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் வரும் 17-ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர நிர்வாகிகள் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், ராமதாஸ் நடத்துக்கும் கூட்டத்துக்கு போட்டியாக ஆக. 9-ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று பாமக தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி மற்றும் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் வெளியிட்ட அறிக்கையில், “பாமக பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கான்ப்ளுயன்ஸ் அரங்கில் ஆக. 9-ம் தேதி நடைபெறும். பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாது பங்கேற்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.