தன்னுடைய அரசியல் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் இரண்டு அமைச்சர்கள் தனக்கு தொல்லை தருவதாக ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சரான சந்திர பிரியங்கா சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கும் வீடியோவால் பரபரத்துக் கிடக்கிறது புதுச்சேரி ஆளும் கூட்டணி வட்டாரம்.
2021-ல் காரைக்கால் மாவட்டத்தில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் திருமுருகன், சந்திர பிரியங்கா ஆகிய இருவரும் வெற்றிபெற்றனர். இருவருமே அமைச்சர் பதவியை எதிர்பார்த்திருந்த நிலையில், சந்திர பிரியங்காவுக்கு அமைச்சர் பதவி கிடைத்தது. இதையடுத்து, சந்திர பிரியங்காவின் ஆதரவாளர்களும் திருமுருகனின் ஆதரவாளர்களுக்கும் ஃபிளெக்ஸ் வைப்பது தொடங்கி அனைத்திலும் முட்டிக் கொண்டனர். இந்த நிலையில், திடீரென 2023 அக்டோபரில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த சந்திர பிரியங்கா, “தொடர்ச்சியாக சாதிய ரீதியிலும் பாலியல் ரீதியாகவும் தாக்குதலுக்கு உள்ளாகி வந்த நான் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்க இயலாது என்பதை உணர்ந்து பதவி விலகுகிறேன்” என்று பகிரங்கமாக அறிவித்து பரபரப்பை பற்றவைத்தார்.
இதற்கு முதல்வர் ரங்கசாமி பதிலேதும் சொல்லாத நிலையில், அப்போதைய துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “அமைச்சர் சந்திர பிரியங்காவின் துறை ரீதியான செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்பதால், அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என முதல்வர் என்னிடம் கேட்டுக்கொண்டார். அதை தெரிந்து கொண்ட அவர், தானே தனது பதவியை ராஜினாமா செய்வது போல் செய்திருக்கிறார்” என்று விளக்கமளித்தார்.
சந்திர பிரியங்காவின் ராஜினாமாவை அடுத்து நீண்ட தாமதத்துக்குப் பிறகு 2024 மார்ச்சில் திருமுருகன் அமைச்சராக்கப்பட்டார். இதன் பிறகும் சந்திர பிரியங்கா மற்றும் திருமுருகனின் ஆதரவாளர்களுக்கு இடையிலான மோதல்கள் தொடர்கதையானது. இந்த நிலையில் தான், இரண்டு அமைச்சர்கள் தனது அரசியல் வளர்ச்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் தன்னை டார்ச்சர் செய்வதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் சந்திர பிரியங்கா.
அந்த வீடியோவில், ‘புதுச்சேரியில் கட் அவுட் வைக்கக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. அதை மதிக்கிறோம். கட் அவுட் வைக்கக்கூடாது என அறிவுறுத்துகிறோம். எனினும் சில சமயங்களில் கட்சியினர் கட் அவுட் வைத்துவிடுகின்றனர். இந்நிலையில், கட் அவுட் வைத்தது தொடர்பாக ஒரு வாரத்திற்கு முன்பு எனக்கு சம்மன் வந்தது. இதன் பின்னணியில் ஓர் அமைச்சர் உள்ளார் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து குறுகிய சிந்தனையுடன் எனக்கு எதிராக செயல்படுகின்றனர். தனது கட்டுப்பாட்டில் இல்லை என்றால் ஒரு பெண்ணை எவ்வளவு டார்ச்சர் செய்வார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம்.
பெண் ஒருவர் அரசியலில் வளர்ந்து வந்துவிட்டால், அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கச் செய்யும் வகையில் அவரை எல்லா வகையிலும் இழிவுபடுத்துவது, வேவு பார்ப்பது, அவரை சார்ந்தோருக்கும் தொல்லை கொடுப்பது என்ன மாதிரியான அரசியல் எனத் தெரியவில்லை. நான் எல்லோரையும் குறை சொல்ல விரும்பவில்லை. ஒரு ஆள் அல்லது இரண்டு ஆள் என வைத்துக் கொள்ளலாம். எனது அப்பா ஸ்தானத்தில் உள்ள முதல்வர் என்.ஆர் ஒருவருக்காக மட்டுமே பொறுத்துக் கொண்டு நான் பெயர் சொல்லாமல் இருக்கிறேன். பாவம் அவரே நிறைய பொறுத்துப் போய்க்கொண்டுதான் உள்ளார்’ என்று பேசி இருக்கிறார் சந்திர பிரியங்கா.
இந்த வீடியோ தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அமைச்சர் திருமுருகனையும் பாஜக அமைச்சரான நமச்சிவாயத்தையும் தான் சந்திர பிரியங்கா சுட்டிக்காட்டுவதாக சமூக ஊடங்களில் பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். ஆனால், நம்மிடம் இதை திட்டவட்டமாக மறுத்த அமைச்சர் திருமுருகன், “2021-ல் நெடுங்காடு தொகுதியில் போட்டியிட்ட சந்திர பிரியங்காவை எனது சப்போர்ட்டில் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தேன். என்னுடைய பழைய தொகுதியில் இருந்து நான் வாங்கிக் கொடுத்த வாக்குகள்தான் அவரின் வெற்றிக்கு முழு காரணம். அதனால் என்னை அவர் குறை சொல்லியிருப்பதாக சொல்லப்படுவது தவறான கணிப்பு என நான் கருதுகிறேன். எனக்கும் சந்திர பிரியங்காவுக்கும் எந்தவொரு கருத்து வேறுபாடும் துளியும் இல்லை. மேலும், எனது துறை சார்ந்த நலத்திட்டங்களை எனது தொகுதியைக் காட்டிலும், அவர் தொகுதிக்குத்தான் அதிகமாகச் செய்திருக்கிறேன்” என்றார்.
சந்திர பிரியங்காவோ, “இரண்டு அமைச்சர்களால் எனக்கு டார்ச்சர் உள்ளது. அதில் ஒருவர், நான் அமைச்சராக இருந்தபோது அமைச்சராக இல்லாதவர். இன்னொரு அமைச்சர், நான் அமைச்சராக இருந்த போதிருந்தே, மிகவும் உச்ச நிலையில் அரசியல் ரீதியாக தொல்லைகள் கொடுத்து வருகிறார். ஒரு பெண், அதுவும் சுயமாக சிந்திக்கும் ஒரு பெண் அரசியலில் வளர்ந்துவிடக் கூடாது, தனக்கு இணையாக இருந்துவிடக் கூடாது என்று நினைக்கின்றனர். தனக்கு கட்டுப்பட்டு இருந்தால், தான் சொல்வதற்கு தலையாட்டிக் கொண்டு இருந்தால், இருந்துவிட்டு போகட்டும் என்று கருதுகின்றனர். இது தொடர்பாக முதல்வரிடம் புகார் தெரிவித்துள்ளேன். அவர் சொல்லும் வரை பொறுத்திருக்கலாம் என நினைக்கிறேன்” என்றார்.
இதனிடையே இந்த விவகாரத்தில் கருத்துத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சரும் காரைக்கால் திமுக அமைப்பாளருமான நாஜிம் எம்எல்ஏ, “முன்னாள் அமைச்சர், தற்போது எம்எல்ஏ-வாக இருப்பவர், பட்டியலினத்துப் பெண்ணான அவரது குற்றச்சாட்டை ஏதோ அவர்களின் கட்சிப் பிரச்சினை என்று எளிதாக கடந்து போக முடியாது. எனவே, தேசிய மகளிர் ஆணையமும், நீதிமன்றமும் தாமாக முன்வந்து இதை வழக்காக எடுத்து விசாரித்து உண்மைகளை பொதுமக்களுக்குச் சொல்ல வேண்டும்” என்று சொல்லி இருப்பதும் அரசியல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
– செ.ஞானபிரகாஷ், வீ.தமிழன்பன்