சாதி ரீதியாக தன்னை ஒதுக்கிவைப்பதாக தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுரேஷ் இளவரசன் புகார் கிளப்பி இருந்த நிலையில், அவரை மாவட்டத் தலைவர் பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட் செய்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறது இளைஞர் காங்கிரஸ் தலைமை!
தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக சூரிய பிரகாஷ் அண்மையில் தான் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து சுற்றுப் பயணத்தில் இருக்கும் அவர், அண்மையில் தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஊழியர் கூட்டத்திலும் கலந்து கொண்டார். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவரான சுரேஷ் இளவரசன் இல்லாமல் துணைத் தலைவர் முத்துக்குமார் தலைமையில் இந்தக் கூட்டத்தை நடத்தியதால் கூட்டம் நடந்து கொண்டிருந்த போதே தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்த சுரேஷ் இளவரசன், மாவட்டத் தலைவரான தன்னை புறக்கணித்துவிட்டு எப்படி கூட்டத்தை நடத்தலாம் எனக் கேட்டு வாக்குவாதம் செய்தார்.
மேலும், “பட்டியலினத்தைச் சேர்ந்தவனாக இருப்பதால் என்னை சாதிய ரீதியில் புறக்கணிக்கிறார்கள்” என்ற பகீர் குற்றச்சாட்டையும் பட்டவர்த்தனமாக எடுத்துவைத்தார்.இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மற்ற நிர்வாகிகள் சமாதானப்படுத்த முயன்றும் கேட்காத சுரேஷ் இளவரசன், கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தார். இந்த நிலையில் தான் அவரை மாவட்டத் தலைவர் பொறுப்பிலிருந்து சஸ்பெண்ட் செய்திருக்கிறார் இளைஞர் காங்கிரஸ் மேலிட பொறுபார்வையாளர் சகரிகா ராவ்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சுரேஷ் இளவரசன், “சூரிய பிரகாஷ் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு வந்து இன்னும் ஒரு மாதம்கூட ஆகவில்லை. தென்காசி மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் ஒருவரது இல்லத் திருமண விழாவுக்காக வந்த அவர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறினார். அதே நாளில் எனக்கு வேறு வேலை இருந்ததால் இன்னொரு நாளில் கூட்டத்தை வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னேன். அதை ஏற்காததால், நேரத்தையாவது மாற்றி வைக்கும்படி சொன்னேன். அதையும் கேட்காமல் என்னை விட்டுவிட்டு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் மூலம் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார்.
கூட்டத்துக்கான போஸ்டரிலும் எனது போட்டோ இல்லை. நான் பட்டியலினத்தைச் சேர்ந்தவன் என்பதால் சாதிரீதியாக ஒதுக்க திட்டமிட்டே என்னைப் புறக்கணித்தனர். அதை ஏற்கமுடியாமல் தான் அவசரமாக புறப்பட்டு வந்து கூட்டத்துக்குச் சென்று விளக்கம் கேட்டேன். எனக்கு உரிய பதிலைச் சொல்லாததால் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் வெளிநடப்புச் செய்தேன். இது தொடர்பாக என்னிடம் விளக்கம் கேட்டதற்கு உரிய பதிலை அளித்துள்ளேன். அப்படி இருக்கையில், நான் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யவில்லை என்றும், கூட்டத்துக்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் மேலிட பொறுப்பாளர் சகரிகா ராவிடம் மாநில தலைவர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் என்னை சஸ்பெண்ட் செய்துள்ளார் சகரிகா ராவ்.
இந்த மாவட்டத்தில் அதிகமான உறுப்பினர்களை இளைஞர் காங்கிரஸில் சேர்த்து, இரண்டாவது முறையாக மாவட்ட தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை சஸ்பெண்ட் செய்ய மேலிட பொறுப்பாளருக்கு அதிகாரம் இல்லை. இது தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் அகில இந்திய தலைமைக்கும் என் தரப்பு நியாயத்தை தெளிவுபடுத்தி உள்ளேன்” என்றார்.
தொடர்ந்து பேசிய சுரேஷ் இளவரசனின் தந்தையும் செங்கோட்டை வட்டார காங்கிரஸ் தலைவருமான கதிரவன், “தேர்தலில் போட்டியிட்டு பதவிக்கு வந்துள்ள எனது மகனை நியமன உறுப்பினராக வந்தவர் சஸ்பெண்ட் செய்வதற்கு அதிகாரம் இல்லை. சாதியரீதியில் எனது மகனை புறக்கணித்திருப்பது எங்கள் சமுதாய மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இதற்குக் காரணமான இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமையும், அகில இந்திய தலைமையும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
சுரேஷ் இளவரசன் சாதிய கண்ணோட்டத்துடன் புறக்கணிக்கப்படுகிறாரா என மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் முத்துக்குமாரிடம் கேட்டதற்கு, “இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவராக கடந்த முறை சுரேஷ் இளவரசன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து அவருடன் இணைந்தே பணியாற்றி வருகிறேன். சாதிய கண்ணோட்டத்துடன் அவரை யாரும் அணுகவில்லை.
விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர், தென்காசி கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்ய அறிவுறுத்தினார். ஒரு வாரம் முன்னதாகவே சொல்லியும் சுரேஷ் இளவரசன் தன்னால் கூட்டத்துக்கு வர முடியாது என்றும், கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய முடியாது என்றும் சொன்னதால் நாங்கள் மாநில தலைவரின் அறிவுறுத்தல்படி கூட்டத்தை ஏற்பாடு செய்தோம்.
கூட்டத்துக்கு முதல் நாள் என்னிடம் பேசிய சுரேஷ் இளவரசன், கூட்டத்தை நடத்த வேண்டாம் என்றார். ஆனால் அதற்கு உடன்படாத நான், ‘கூட்டத்திற்கு வந்து உங்கள் பிரச்சினையைச் சொல்லுங்கள்’ என்றேன். அதன்படி கூட்டத்துக்கு வந்த அவர் வாக்குவாதம் செய்தார். ‘கூட்டத்துக்கு வர முடியாது என்று சொன்ன உங்களால் இப்போது எப்படி வர முடிந்தது?’ என்று மாநில பொறுப்பாளர் சகரிகா கேட்டதற்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை. இதையடுத்தே அவரை சகரிகா சஸ்பெண்ட் செய்துள்ளார்” என்றார். எல்லா கட்சிகளிலும் குடுமிபிடி சண்டைகள் நடக்கையில் நாம் மட்டும் சும்மா இருந்தால் எப்படி என கதர் பார்ட்டிகளும் களத்தில் இறங்கிவிட்டார்கள் போலிருக்கிறது!