கடலூர் / மயிலாடுதுறை: எனது வீட்டில் அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். கடலூர் மேற்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம் விருத்தாசலத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் ராமதாஸ் பேசியதாவது: மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் 2,700 பேர் கலந்துகொண்டனர். என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோருக்காக பாமக தொடர்ந்து போராடியும், என்எல்சி நிறுவனம் செவிசாய்க்கவில்லை. எங்கள் போராட்டம் தொடரும். 10.5 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற, உங்களிடம் உள்ள விலைமதிப்பற்ற ஆயுதமான வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.
மற்றவர்களுக்கு வாக்களித்தால் நமக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். நம்மிடம் 40 எம்எல்ஏக்கள், 5 எம்.பி.க்கள் இருந்திருந்தால் என்எல்சி நிறுவனம் பயந்திருக்கும். எனவே, சரியானவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். இம்முறை பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
கூட்டத்தில், பாமக கவுரவ தலைவர் ஜி.கே. மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, “எனது வீட்டில், எனது நாற்காலிக்கு அருகில் அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்தது. இதை 2 நாட்களுக்கு முன்புதான் கண்டுபிடித்தோம். இது லண்டனில் இருந்து தருவிக்கப்பட்ட, அதிக விலைஉள்ள கருவியாகும். இதை யார் வைத்தது, எதற்காக வைத்தார்கள்? என்று ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம்” என்றார்.
கல்லூரி கட்டுவதில் தவறில்லை: பாமக நிறுவனர் ராமதாஸ் மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகாரில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பாமக சேரும் அணி பெரிய வெற்றியை பெறும். எனது மகளை கட்சித் தலைவராக்கும் நோக்கில் நான் மகளிர் மாநாடு நடத்தவில்லை. வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்பதற்கேற்ப தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. பிரதமர் எனக்கு நண்பர், அதனால் நிதியைக் கேட்டு வாங்குவேன்.
கோயில்களுக்கு அதிக வருமானம் வந்தால், கல்லூரி கட்டுவதிலோ, கல்வி நிறுவனங்கள் தொடங்குவதிலோ தவறில்லை. பூம்புகாரில் நடைபெறும் மகளிர் மாநாட்டில் அன்புமணி கலந்துகொள்வாரா என்பது, போகப்போகத்தான் தெரியும். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.