மதுரை: “எனது குரல் ஓங்கி ஒலிக்க வேண்டுமெனில் சட்டமன்றத்தில் என்னை அமர வையுங்கள்” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மதுரை மறை மாவட்ட புதிய பேராயராக அந்தோணிசாமி சவரிமுத்து சமீபத்தில் பொறுப்பேற்றார். புதூர் பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் அவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதன்பின், அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தை மீட்போம், ஓரணியில் திரள்வோம் என சொல்கிறார்கள். தமிழகத்தை யாரிடத்தில் அடமானத்தில் வைத்துள்ளார்கள்? இவ்வளவு நாட்கள் மீட்காமல் என்ன செய்தனர்?
எதற்கு ஓரணியில் திரள வேண்டும்? நீட் தேர்வை ரத்து செய்வதற்கவா? ஜிஎஸ்டியை எதிர்த்து போராடவா? கச்சதீவை மீட்கவா ? தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தை நாசம் செய்ததே கருணாநிதிதான். ஓரணியில் திரண்டு எந்த நோக்கத்துக்காக போராட போகிறோம்? கூடி கொள்ளையடிக்கவா? கோடி டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்கவா என்பதை தெளிவுபடுத்துங்கள்.
திடீரென்று வங்க மொழியை ஆதரித்து முதல்வர் பேசுகிறார். எனது மொழியில் இருந்து ஒரு கடிதம் வருவது கிடையாது. திமுகவே இப்போதுதான் தமிழில் அரசாணையே வெளியிடுகிறார்கள். தேர்தல் வரும்போது பாசம், வேஷம் போட்டு நடிப்பார்கள். சுதந்திர பசி கொண்டுள்ள மக்களை சோற்றுப் பசி ஒன்றும் செய்யாது. எனக்கு வயிற்றுப் பசி இல்லை. எனக்கு இருப்பது சுதந்திரப் பசி. என்னுடன் வருபவன் என்னை விட லட்சியத்தில் உறுதியாக வருவானே தவிர, அற்பப் பசிக்கு வரமாட்டான். தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க முடியாது. அது எனது தலைமுறையை நாசமாக்கி விடும்.
கூட்டணி வைத்து 5, 10 எம்எல்ஏவோடு சென்றவர்கள் என்ன சேவை செய்தார்கள்? எனது குரல் வலிமையாக ஒலிக்கவேண்டும் என்றால் சட்டமன்றத்தில் என்னை அமர வைக்க வேண்டும்.
தமிழகத்தில் மெதுவாக இந்தியை திணித்து இந்தி பேசும் மாநிலமாக அபகரித்து வருகின்றனர். திமுக வட இந்தியர்கள் வாக்குகளைப் பெற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். எனது மொழி, இனம் என யாரும் பேசமாட்டார்கள். வெளி மாநிலத்தவர்களுக்கு தமிழகத்தில் ஓட்டுரிமை வழங்கக் கூடாது. நான் இருக்கும் வரை அது நடக்காது.
கிளர்ச்சி ஏற்படும்போது, யார் ஆட்சி அமைக்கவேண்டும் என மக்கள் முடிவு செய்வர். திமுக தலைமையிலான கூட்டணியை வீழ்த்த வேண்டும் என பேசுவதும், பாஜக வளரக் கூடியதும் என திமுக பேசுவது வேடிக்கையாக உள்ளது. திமுக, அதிமுக ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் யாரும் வாக்கு செலுத்துவதில்லை. திமுக வரக் கூடாது என அதிமுகவுக்கும், அதிமுக வரக் கூடாது என்று திமுக வுக்கும் மக்கள் வாக்களித்து வருகின்றனர். பிசாசை விவகாரத்து செய்துவிட்டு பேயை கல்யாணம் செய்கிறார்கள். தீமையை தீமையை வைத்து எப்படி ஒழிக்க முடியும்?
100 நாள் வேலை திட்டத்தில் எத்தனை மரங்கள் நட்டார்கள்? எத்தனை ஏரிகளை தூர்வாரினர்? இந்தத் திட்டத்தை கொடுத்து மக்களை சோம்பேறியாக்கி இந்தியா கடன்கார நாடாகிவிட்டது.
ஒருவர் வேலைக்கு வரும்போது, அவருடைய நேர்காணலை வைத்து என்ன பதில், கருத்துகள் சொல்கிறார்கள் என்ற அடிப்படையில்தான் தேர்வு செய்வர். அவ்வகையில் திரைப்புகழ் உள்ள விஜய்க்கு எங்களைக் காட்டிலும் வெளிச்சம் உள்ளதாக சொல்கின்றனர். அதில் தவறில்லை. ஆனால், அவர் எந்த தத்துவத்தை வைத்து, என்ன போராட்டத்தை முன்னிறுத்தி நடத்தினார் என்பதை வைத்தே அரசியல் எதிர்காலம் உள்ளது.
விஜயகாந்த் என்பவருக்கு இல்லாத எழுச்சியா? விஜயகாந்த் எப்போது கூட்டணிக்கு சென்றாரோ அப்போதே அவருக்கு வாக்கு சதவீதம் குறைந்துவிட்டது. கமல்ஹாசன் அரசியலில் வரும்போது, திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் போட்டியில் இருப்பதாக சொன்னார்கள். அமமுகவை கூட சொன்னீர்கள். எங்களை மற்றவையில் தானே வைத்திருந்தார்கள்.
அரசியலுக்கு வருவது பிரச்சினை இல்லை. எந்தக் கட்சிக்கு மாற்றாக வருகிறார்கள். எந்த கோட்பாட்டுக்கு எதிராக வருகிறார்கள் என்பதுதான் கேள்வி. திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிறார்கள். அவர்கள் அண்ணாவை வைத்துகொண்டு முன்பாக சென்று கொண்டிருக்கிறார்கள். வேறு கொள்கையை வைத்து முன்னாடி சென்றால் தான் வீழ்த்த முடியும். விஜய் அண்ணா வழியில் செல்கிறார் என்றால் முக.ஸ்டாலின், எடப்பாடி எவ்வழியில் செல்கிறார்கள்? அவர்கள் எல்லாம் அண்ணா வழியில் செல்லும் நிலையில் நான் எனது அண்ணன் வழியில் செல்கிறேன்” என்றார் சீமான்.