கோபிசெட்டிபாளையம்: அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று தான் எழுப்பிய குரலுக்காக தனது பதவி பறிக்கப்பட்ட நிலையில், தனக்கு ஆதரவாக ராஜினாமா செய்த தொண்டர்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரச்சாரத்தின் இரண்டாம் கட்ட சுற்றுப் பயணத்தில் உள்ளார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் ஒன்றிணைக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி இருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பழனியில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை கட்சி பதவிகளில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். இதனிடையே, நேற்று முதல் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி பதவி நீக்கப்பட்டத்தை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் பலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ”தன்னை சந்திக்க அதிமுகவின் தொண்டர்கள் நேற்று முதல் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து வந்து கொண்டு இருகின்றனர். அவர்களுக்கு நன்றி.
தமிழக முழுவதும் ஏராளமான தொண்டர்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் அதிகப்படியான ஆதரவு கிடைத்துள்ளது. எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.