சென்னை: எந்த நிதிமோசடி வழக்கிலாவது 2 ஆண்டுகளுக்குள் வழக்கை முடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுத்த வரலாறு உள்ளதா என பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனென்ட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிறுவன இயக்குநர் தேவநாதன் யாதவ் உள்ளிட்ட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் யாதவ் உயர் நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக தாக்கல் செய்திருந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து வழக்கு விசாரணையை நீர்த்துப்போகச் செய்து விடுவார் என்று குறிப்பிட்டார்.
அந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, “மனுதாரர் கடந்த ஓராண்டுக்கும் மேலாக சிறையில் உள்ளார். இந்த ஓராண்டு காலத்தி்ல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்த முதலீட்டாளர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வரை இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.
எந்த நிதிமோசடி வழக்கிலாவது 2 ஆண்டுகளுக்குள் வழக்கை முடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுத்த வரலாறு உள்ளதா” என பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு கண்டனம் தெரிவித்தார்.
அப்போது தேவநாதன் யாதவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, “மனுதாரருக்கு குறைந்தபட்சம் 6 வார காலமாவது இடைக்கால ஜாமீன் வழங்கினால் தான் சொத்துகளை விற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க ஏதுவாக இருக்கும்” என்றார்.
அதையடுத்து நீதிபதி, மனுதாரருக்கு சொந்தமான சொத்து விவரங்கள் மற்றும் இருப்பில் உள்ள பணம் குறித்த விவரங்களை ஆக.25-ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டுமென தேவநாதன் யாதவ் தரப்புக்கு உத்தரவிட்டார். மேலும், இதில் ஒரு சென்ட் நிலம் அல்லது ஒரு ரூபாயை மறைத்தாலும் கூடகடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என எச்சரித்து, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.