தாம்பரம்: “ஆபரேஷன் சிந்தூரில் எத்தனை ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன?” என்று திமுக எம்.பி டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியுள்ளார்.
தாம்பரம் மாநகர திமுக சார்பில் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் பொதுக் கூட்டம் தாம்பரத்தில் நேற்று (ஜூன் 4) நடைபெற்றது. தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக பொருளாளரும், திமுக மக்களவை குழுத்தலைவருமான டி.ஆர்.பாலு மற்றும் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் பெ.செல்வேந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் டி.ஆர்.பாலு பேசியது: “இந்தியா – பாகிஸ்தான் இடையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் இந்திய ராணுவம் முப்படைகளும் தங்களது செயல்திறனால் பாகிஸ்தானின் கொக்கரிப்பை அடக்கியது. இந்தச் சூழ்நிலையில் மறைந்த முதல்வர் கருணாநிதி இருந்திருந்தால் என்ன செய்து இருப்பாரோ, அதையே நமது முதல்வரும் செய்துள்ளார். எதை பாராட்ட வேண்டுமோ அதை பாராட்டியுள்ளார். எதை எடுத்து கூற வேண்டுமோ அதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடிதமாக எழுதியுள்ளனர்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ சில நாட்களே நடைபெற்றது. பாகிஸ்தானின் ராணுவ தளங்கள் அழிக்கப்பட்டன. விமானங்கள் அழிக்கப்பட்டன. ஆனால், பாகிஸ்தான் தலைதூக்க இன்னும் 6 மாத காலம் ஆகும் என்ற நிலையில் உள்ளது. இந்திய ராணுவம் மிக பெரிய சாதனையை ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் நிகழ்த்தி உள்ளது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது ஆபரேஷன் புளுஸ்டார் மூலம் அமிர்தசரஸ் பொற்கோயிலில் இருந்த பயங்கரவாதிகளை அப்புறப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வெற்றிகரமாக நடத்தி முடித்தார்.
அதேபோல் இப்போது ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடத்தியதால், தன்னிடம் அணு ஆயுதம் உள்ளது என்று கொக்கரித்து கொண்டிருந்த பாகிஸ்தான் இன்று அடங்கியுள்ளது. இதனால் இந்திய ராணுவத்தை அனைவரும் பாராட்டுகிறோம், போற்றுகிறோம், புகழ்கிறோம். தங்களது பலம் குறித்து தெரிந்து வைத்திருக்கும் அதே நேரத்தில் நமது பலவீனத்தையும் நாம் தெரிந்து வைத்திருக்கவேண்டும். அதனால்தான் நாடாளுமன்றக் குழு தலைவர்கள் அனைவரும் பிரதமருக்கு கடிதம் எழுதினோம்.
இதுவரை நாடாளுமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் இப்போது மழைக்கால கூட்டதொடர் ஜூலை 21-ம் தேதி தொடங்கும் என அறிவித்து உள்ளார்கள். ‘ஆபரேஷன் சிந்தூர்’ போர் நடந்தவிதம், போரில் ஏற்பட்ட இழப்புகள், போரின் வெற்றி தோல்வி குறித்து நாடாளுமன்றத்தில் பேசி, அதை மக்களுக்கு எடுத்து சொன்னால் தான் நமது பலம், பலவீனம் இரண்டும் புரியும். எதிர்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது கடமைகளை செய்வதற்கு அரசாங்கம் தவறு செய்தால் அதை சுட்டிக்காட்டுவதற்கு நாடாளுமன்றத்தில் பேசிட ஏதுவாக இருக்கும் என்று கடிதம் எழுதினோம்.
இதுவரை எந்த பதிலும் இல்லை. ஆனால், மழைகால கூட்டத்தொடரை முன்கூட்டியே அறிவித்துள்ளார்கள். நியாயமான முறையில் வரைமுறைகளுக்கு கட்டுப்பட்டு நாடாளுமன்ற நடைமுறைகளுக்கு கட்டப்பட்டு அமைச்சர்களும் அறிவார்ந்த பெரியவர்கள் இருந்த சபையாக நாடாளுமன்றம் இருந்தது. ஆனால், இப்போது இருக்கும் சபை என்பது அப்படி இல்லை. போரில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மக்கள் கேட்கிறார்கள் என்று கடிதம் எழுதினோம். அந்தக் கடிதத்துக்கு இதுவரை பதில் இல்லை.
பலவீனமாக இருப்பதால்தான் நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டவில்லை என்பதே எங்களது குற்றசாட்டு. இந்திய ராணுவ தலைமை தளபதி கூறுகிறார், நமது நாட்டின் ராணுவம் மிகவும் பலமானது, ஆகையால் தான் பாகிஸ்தானை நாம் வென்றோம். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், இழப்பு குறித்து பேசவேண்டாம் என்கிறார். இழப்பு குறித்து தெரிவிக்க விரும்பாததால், நமக்கு ஏற்பட்ட இழப்பு வெளியே கூறமுடியாத அளவில் இருக்கும் என்று நாங்கள் சந்தேகம் அடைகிறோம்.
மக்களின் வரிப் பணத்தில் ராணுவம் நடத்தி வருகிறீர்கள். நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்டே ஆகவேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை மத்திய ஆட்சியாளர்களுக்கு உள்ளது. எத்தனை ரஃபேல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன? பிரான்ஸிடம் இருந்து வாங்கும்போது ஒரு ரஃபேல் விமானத்தின் விலை ரூ.1450 கோடி. இதில் எத்தனை விமானங்களை இழந்தோம் என்று நாடாளுமன்றத்தில் ஆட்சியாளர்களே தெரிவிக்கலாம். அதிகாரிகளும் அமைச்சர்களும் சொல்ல நினைத்தால்கூட பிரதமர் அவர்களை சொல்ல விடமாட்டார்,
உண்மையை மறைப்பதில் வல்லவர் அவர். ஒரு மோசமான மனிதர் இந்த நாட்டின் பிரதமராக இருக்கும் காரணத்தால் இந்த நாட்டில் நடக்கவேண்டியது முறைபடி நடக்கவில்லை. ராணுவத்தின் வெற்றியை தன்னுடைய வெற்றியாக காட்டிக் கொள்கிறார். ராணுவமும் முப்படைகளும் வெற்றி பெற்றது. ஆனால் தாங்கள் வெற்றி பெற்றதாக பாஜகவினரும் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களும் மார்தட்டிக்கொள்கிறார்கள்,” என்று அவர் பேசினார்.