தருமபுரி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளையும் கடந்தமுறை அதிமுக கூட்டணி தான் கைப்பற்றியது. இம்முறை அதை உடைக்க நினைக்கிறது திமுக. அதற்காகவே இதுவரை அரசு முறை பயணங்களையும் சேர்த்து 6 முறை இந்த மாவட்டத்துக்கு வருகை புரிந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனாலும், இம்முறையும் இங்கே திமுக கூட்டணிக்கு வேலை இல்லை என்கிறது அதிமுக கூட்டணி.
அண்மையில் தருமபுரிக்கு வருகை தந்த முதல்வர், இந்த மாவட்டத்துக்கு கடந்த நாலரை ஆண்டுகளில் பலமுறை வந்து போயிருப்பதையே பெருமிதமாக பேசினார். இதை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள், “கடந்த முறை மாவட்டத்தில் 5 தொகுதிகளும் கைநழுவிப் போனதுபோல் இம்முறையும் போய்விடக் கூடாது என்பதற்காகவே தருமபுரிக்கு அடிக்கடி வந்து போகிறார் முதல்வர். ஆனால், எத்தனை முறை வந்தோம் என்பதை விட மாவட்டத்துக்காக என்ன செய்தோம் என்பது தான் முக்கியம்” என்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தருமபுரி மாவட்ட பாஜக முன்னாள் தலைவரான பாஸ்கர், “மகளிர் உரிமைத் தொகை திட்டம், இணையவழி பயிர்க் கடன் திட்டம் ஆகியவற்றை தருமபுரி மாவட்டத்தில் தான் தொடங்கி வைத்ததாக முதல்வர் பெருமையோடு சொல்கிறார். இவற்றைத் தொடங்கி வைக்க தருமபுரிக்கு ஏன் வரவேண்டும்… கோட்டையில் இருந்தபடியே தொடங்கி வைத்திருக்கலாமே? இதைத் தவிர்த்து இந்த மாவட்டத்துக்கு மட்டுமே ஆன சிறப்புத் திட்டங்கள் எதையும் ஸ்டாலின் தரவில்லையே?
சிறிதும் பெரிதுமாக மாவட்டத்தில் 8 அணைகள் இருந்தும் போதிய நீர்வளம் இல்லை. இதனால், வளமான விளைநிலங்கள் இருந்தும் விவசாயம் செய்யமுடியவில்லை. அதனால் இங்குள்ள மக்கள் பிழைப்புத் தேடி வெளி மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் போகிறார்கள். ஒகேனக்கல் உபரி நீரேற்றும் திட்டத்தைச் செயல்படுத்தினால் மழைக் காலத்தில் மாவட்டத்தின் அனைத்து நீர்நிலைகளும் பஞ்சமில்லாமல் நிரம்பிவிடும். ஆனால், இதற்காக திமுக ஆட்சி இதுவரை சிறு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும் சிப்காட் திட்டத்துக்கு இதுவரை ஒரே ஒரு சாலை மட்டுமே போட்டிருக்கிறார்கள். நாலரை ஆண்டுகளில் இது மட்டுமே அவர்களால் முடிந்திருக்கிறது. இந்த லட்சணத்தில், வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கான தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்த்துள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஜம்பமடிக்கிறார்.
குடிநீர் பற்றாக்குறையை போக்கிட இரண்டாம் கட்ட ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை ரூ.8 ஆயிரம் கோடியில் மேற்கொண்டு வருவதாக முதல்வர் சொல்கிறார். ஆனால், அதற்கான பணிகள் எங்கே நடக்கின்றன என்று யாருக்கும் தெரியவில்லை. மத்திய அரசுக்கு நற்பெயர் கிடைத்துவிடக் கூடாது என்பதால் பிரதமர் வீடு கட்டும் திட்டத்துக்கும் பலவழிகளிலும் முட்டுக்கட்டை போடுகிறார்கள். மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தி இருந்தாலே முதல்வர் இங்கு அடிக்கடி வரவேண்டிய அவசியமே இருக்காது. அப்படிச் செய்யாததால் தான் அடிக்கடி வந்து போகிறார். ஆனால், மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் இன்னும் எத்தனை முறை அவர் இங்கு வந்து போனாலும் தருமபுரி மக்கள் ஏமாறமாட்டார்கள்” என்றார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுக முன்னாள் எம்பி-யான மருத்துவர் டி.என்.வி.செந்தில்குமார், “இந்த மாவட்டத்தில் கடந்த முறை 5 தொகுதிகளிலும் திமுக தோற்றதால் அதை சரிசெய்ய தலைவர் மு.க.ஸ்டாலின் தருமபுரிக்கு அடிக்கடி வருவதாக எதிர்கட்சியினர் தவறாகப் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால், அவர் முதல்வர் ஆவதற்கு முன்பிருந்தே தருமபுரிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார். வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டங்களை தருமபுரி மண்ணில் இருந்து தொடங்கி வைப்பதில் முதல்வருக்கு தனி பிரியம். அதோடு, மாவட்டத்துக்கான பல முக்கிய திட்டங்களை நிறைவேற்றியும் தந்துள்ளார்.
இன்னும் பல திட்டங்களை நிறைவேற்றவும் தனி கவனம் செலுத்தி வருகிறார். இதையெல்லாம் அவர் தேர்தல் கண்ணோட்டத்தில் செய்வதாக இருந்தாலும் அதிலொன்றும் தவறில்லையே. ஒரு கட்சியின் தலைவராக, தன் கட்சிக்கு செல்வாக்கு குறைவாக உள்ள பகுதிகளில் கட்சியை வலுப்படுத்துவதுடன், மக்களுக்கான நலத்திட்டங்களையும் வழங்கி வருகிறார். பாஜக-வுக்கு தேர்தல் நேரத்தில் மட்டுமே தமிழகம் கண்ணுக்கு தெரிகிறது. இந்தச் சூழலில், மக்கள் நலனில் அக்கறை கொண்ட எங்கள் தலைவரை பாஜக-வினர் விமர்சிப்பது வேடிக்கையாகத்தான் உள்ளது” என்றார்.