சென்னை: எண்ணூர் அனல் மின நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.
இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டின் சென்னையில் கட்டிடம் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்து குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியிருந்து தலா. ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன? – திருவள்ளூர் மாவட்டம், வாயலூரில் 2×660 MW மெகா வாட் திறனுடைய எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உய்ய அனல் மின் திட்ட கட்டுமானப் பணிகள் சமீப காலமாக நடைபெற்று வருகிறது. பாரதமிகு நிறுவனம் சார்பில் நடைபெற்று வரும் இந்தக் கட்டுமான பணியில் 3,000-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுமான பணியில் தற்போது, சுமார் 70 சதவீத பணிகள் முடிவடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல மிக உய்ய அனல் மின் நிலைய கட்டுமான பணியில், அனல் மின் நிலைய முகப்பு பகுதி அமைக்கும் பணியில் இன்று மாலை சுமார் 30-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது, திடீரென இரும்பு கம்பிகளால் ஆன முகப்பு பகுதியில் உள்ள சாரம் சரிந்து விழுந்தது. இதில், படுகாயமடைந்த பலரில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்றவர்கள் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு 4 தொழிலாளர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், சிலர் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.