சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘மக்களை காப்போம் – தமிழகத்தை மீட்போம்’ என்ற தொடர் பிரச்சார சுற்றுப் பயணத்தை கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதியில் வரும் ஜூலை 7-ம் தேதி தொடங்குகிறார். ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்த கடலூர் மற்றும் தஞ்சை மாவட்ட சுற்றுப்பயண விவரங்களில், சில தேதிகளும் இடங்களும் மாற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்த சுற்றுப் பயணத்தை 7-ம் தேதி கோவை மேட்டுப்பாளையம் தொகுதியில் தொடங்குகிறார். பின்னர், கவுண்டம்பாளையம் தொகுதிக்கு செல்கிறார். 8-ம் தேதி கோவை வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகள், 10-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம் தொகுதிகள், 11-ம் தேதி வானூர், மயிலம், செஞ்சி தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
12-ம் தேதி கடலூர் மாவட்டம் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி தொகுதிகள், 14-ம் தேதி குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய தொகுதிகள், 15-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகள், 16-ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய தொகுதிகள், 17-ம் தேதி மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
18-ம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர், 19-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். 21-ம் தேதி மன்னார்குடி, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், கும்பகோணம் ஆகிய தொகுதிகள், 22ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், தஞ்சாவூர், திருவையாறு ஆகிய தொகுதிகள், 23-ம் தேதி, ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.