திருப்பூர்: அவிநாசியில் இளம்பெண் ரிதன்யா (27) தற்கொலை விவகாரம் தொடர்பாக, அவரது தந்தை அண்ணாதுரை, தாய் ஜெயசுதா மற்றும் குடும்பத்தினர் சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது மகள் ரிதன்யாவுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ம் தேதி, காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவரான ஆர்.கிருஷ்ணனின் மகன் வழி பேரனான கவின்குமார் (29) என்பவருக்கும் திருமணம் செய்து வைத்தோம்.
எனது மகளை கவின்குமாரும், அவரது பெற்றோரும் கொடுமைப்படுத்தி உள்ளனர். எனது மகள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தப்பட்டதாக, தற்கொலைக்கு முன் அவரே ‘வாட்ஸ்அப்’-ல் ஆடியோ பதிவுகளை அனுப்பி உள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருப்பதால், விசாரணை எந்தளவுக்கு முழுமையாக நடைபெறும் என்பது எங்களுக்கு தெரியாது.
எனவே, இவ்விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு, எங்களுக்கு நீதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், என குறிப்பிட்டுள்ளனர். இதுதொடர்பாக திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஆர்.கிருஷ்ணன், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, “நான் யாரையும் சந்தித்து, இந்த விஷயத்தை பேசவில்லை. அரசியல் ரீதியாக யாருக்கும் எவ்வித அழுத்தமும் தரவில்லை” என்றார்.