செங்கல்பட்டு நகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களுக்கு அருகே எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படாததால் பொதுமக்கள் பள்ளத்தில் விழும் அபாயம் உள்ளது. செங்கல்பட்டு நகராட்சியில் 11,285 வீடுகள் உள்ளன.
இதில் 493 தெருக்கள் உள்ளன. தற்போது இங்கு மத்திய அரசு தூய்மை இந்தியா 2.0 திட்டத்தில் ரூ. 63 கோடி, தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வங்கி கடன் வாயிலாக ரூ.62.48 கோடி, தமிழக அரசு ரூ.62.47 கோடி என மொத்தம் 188.25 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக செங்கல்பட்டு நகரில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பகுதி வழியாக குடியிருப்பு மற்றும் பணிக்கு செல்வோர் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர். அப்போது சாலைகளில் ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள பள்ளங்களில் ஏறி இறங்கும்போது விபத்துகளில் சிக்குகின்றனர். பணிகள் நடைபெறுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றி தடுப்பு பலகைகள், அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்.
ஆனால் ஒப்பந்ததாரார் எந்த பணியும் செய்யவில்லை என புகார் எழுந்துள்ளது. இதை தவிர்க்க பணிகள் நடைபெறும் இடம் மற்றும் மாற்று வழிகளில் செல்வதற்கான அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் மெய்யப்பன் கூறியது: பாதாள சாக்கடை திட்டப்பணி நடைபெறும் இடங்களில் வாகனங்கள் செல்லக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இதனால், வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்லாமல் இருக்கவும், விபத்துகளை தவிர்க்கவும் முடியும்.
பாதாள சாக்கடை பணி நடைபெறுவது குறித்து அந்த சாலையில் தகவல் பலகையோ, தடுப்புகளோ வைக்காததால் வாகன ஓட்டிகள் பணி நடைபெறும் இடம் வரை வாகனங்களில் வந்து திரும்பிச் செல்கின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க பாதாள சாக்கடை திட்டம் குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.