மதுரை: “மக்கள் இருக்கும் இடத்துக்குச் சென்றுதானே ஆளுங்கட்சியின் ஊழல்களை சொல்ல முடியும்” என்று நடைபயண அனுமதி மறுப்பு குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் புதூர் பகுதியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிரச்சார நடைபயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கரூர் சம்பவத்தால் நடைபயணத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், அதே புதூர் பகுதியில் ஏற்பாடு செய்திருந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக, சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த அன்புமணி பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: ”மதுரை, நெல்லை, கன்னியா குமரியில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் உள்ளன. இதற்காக வந்தேன். எனது நடைபயணத்துக்கு காவல் துறை அனுமதி வழங்கவில்லை. ஆனால், பொதுக் கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் கூட்டம் நடத்தக் கூடாது, தனியார் இடங்களில் நடத்திக் கொள்ளுங்கள் என நீதிமன்றம் கூறுகிறது. மேலும், எங்களை போன்ற கட்சிகள் எல்லாம் மக்கள் இருக்கும் இடத்துக்குச் சென்றுதான் பிரச்சாரம் நடத்த முடியும். அப்போதுதான் ஆளும் கட்சி என்னென்ன ஊழல்கள் செய்துள்ளது என மக்கள் முன் சொல்ல முடியும்.
கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 1,968 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உணவளிக்கும் கடவுகளான விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர் என்பது மிகப் பெரிய துயரம். இது கவலை அளிக்கிறது. ஒரு விவசாயியும் தற்கொலை செய்யக்கூடாது.
சாதிவாரியாக கணக்கெடுப்பு குறித்து கர்நாடகா அரசுக்கு அதற்குரிய உரிமை உள்ளது என நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. இதன்படி, மாநில அரசு தானே கணக்கெடுப்பை நடத்திக் கொள்ளலாம். இதற்குப் பிறகும் தமிழக முதல்வர் மவுனமாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. தமிழ்நாட்டுக்கு அதிகாரம் இல்லை என்று கூறுவது 100% பொய். இது சாதிப் பிரச்சினை அல்ல. சமூக, பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களை அடையாளம் காணும் முயற்சி. சாதிவாரியாக கணக்கெடுப்பை நடத்த வேண்டும்” என்றார்.
பாமக நிறுவனர் ராமதாஸின் உடல் நிலை குறித்து கேட்கும்போது, “அவர் அப்பலோ மருத்துவ மனையில் வழக்கமான பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பழைய நிலைதான் உள்ளது. ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதால் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். முதல்வர் நேரில் வந்து சந்தித்தது நல்லது” என்று அன்புமணி கூறினார்.