என்னதான் காசு கொடுத்து கூட்டம் கூட்டினாலும் வந்த கூட்டத்தை தக்கவைக்க குத்துப் பாட்டுக்கு நடனமாட வைப்பது இப்போது பெரும்பாலான அரசியல் கட்சிகளில் ஃபேஷனாகி விட்டது. கூட்டத்தை தக்கவைக்கத்தான் அப்படி என்றால் சொந்தக் கட்சியினரை குஷிப்படுத்தவும் ஆபாச நடனம் ஆடவைத்து வலைதளங்களில் வறுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆற்காடு அதிமுக-வினர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் மாற்றுக் கட்சியினர் அதிமுக-வில் இணையும் நிகழ்ச்சிக்கு அண்மையில் ஏற்பாடு செய்திருந்தார்கள். ராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆற்காடு நகரச் செயலாளர் ஜிம் எம்.சங்கர் தடபுடலாகச் செய்திருந்தார். காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.
முன்னாள் அமைச்சர்கள் அங்கு வருவதற்கு முன்னதாக அரங்கத்தில் கூடிய அதிமுக-வினருக்கு அலுப்புத் தட்டாமல் இருப்பதற்காக பெங்களூருவைச் சேர்ந்த கலைக் குழுவினரின் ‘ஆடல் பாடல்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். இந்தக் குழுவினர் ஆரம்பத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா நடித்த சினிமா பாடல்களுக்கு நடனம் ஆடினர். ஆனால், நேரம் ஆக ஆக ஆட்டத்தின் போக்கு டிராக் மாறியது. எம்ஜிஆரின் தத்துவப் பாடல்களும், கொள்கைப்பாடல்களும் காணாமல் போய் லேட்டஸ்ட் குத்துப் பாடல்களை ஒலிக்கவிட்டு அதற்கேற்ப ஆபாச அசைவுகளை வெளிப்படுத்தத் தொடங்கினர்.
இதைப் பார்த்துவிட்டு மூத்த அதிமுக நிர்வாகிகள் சிலர் தலையில் அடித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தனர். முன்னாள் அமைச்சர்களும் இதைப் பார்த்து முகம் சுளித்தபடியே அரங்கிற்குள் வந்தனர். உடனே சுதாரித்துக் கொண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், அவசர அவசரமாக ஆடல் பாடல் நிகழ்ச்சியை நிறுத்தி கலைக் குழுவினரை அங்கிருந்து பேக் அப் செய்தனர்.
ஆனால், அதற்குள்ளாக இந்த ஆபாச நடனக் கூத்துகளை வீடியோ எடுத்தவர்கள் சமூக வலைதளங்களில் வைரலாக்கிவிட்டனர். இது அதிமுக தலைமை வரைக்கும் எட்டியதை அடுத்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
சொந்தக் கட்சிக்காரர்களை இழுத்து உட்காரவைக்கவும் ஆபாச நடனத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறதா அதிமுக என ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.எம்.சுகுமாரிடம் கேட்டதற்கு, “அப்படி எல்லாம் இல்லீங்க… கலைநிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் போதே எம்ஜிஆர், ஜெயலலிதா பாடல்களை மட்டுமே ஒலிபரப்பணும்னு கட்டாயமா சொல்லி இருந்தோம். ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக எங்களுக்கே தெரியாமல் ஒரு தவறு நடந்து விட்டது. உடனே சுதாரித்து ஆபாச நடனத்தை நிறுத்திவிட்டோம். ஆனாலும், இதை சிலர் வேண்டுமென்றே வீடியோ எடுத்து பெரிதாக்கிவிட்டனர். இனி இப்படி நடக்காது’’ என்றார்.
ஆற்காடு நகர அதிமுக செயலாளர் ஜிம் எம்.சங்கரோ, “முன்னாள் அமைச்சர்கள் வரும் வரை கட்சியினருக்கு போரடிக்காமல் இருக்க கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அவர்களும் ஆரம்பத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா பாடல்களுக்கு தான் நடனம் ஆடினர். வெறும் 20 செகண்ட் மட்டுமே குத்து பாடலுக்கு ஆபாச நடனம் ஆடிட்டாங்க. இருந்தாலும் இது தவறு என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
ஆனால், திமுக நிகழ்ச்சிகளில் ஒரு நாள் முழுக்க இது போன்ற ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்படுகிறது. அதையெல்லாம் பெரிதாக யாரும் பேசுவதில்லை. அதிமுக நிகழ்ச்சியில் வெறும் 20 செகண்ட் மட்டுமே ஆடப்பட்ட இந்த நடனத்தை சிலர் பெரிதாக்கிவிட்டனர். இது எங்களுக்குத் தெரியாமல் நடந்திருந்தாலும் தவறு தான் என்பதால் தலைமைக்கு இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறோம். இதற்கு மேல் இதை பெரிதாக்க வேண்டாம் என நினைக்கிறோம்’’ என்றார்.