சென்னை: போக்குவரத்துக் கழகங்களின் ரூ.22 கோடி நிலுவையால் ஊழியர்களுக்கு கடன் வழங்க முடியாமல் சிரமத்தை சந்திப்பதாக போக்குவரத்துக் கழக பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன சேமிப்பு மற்றும் கடன் சங்கம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட கழகங்களைச் சார்ந்த பணியாளர்கள் சென்னையில் உள்ள பணியாளர்கள் கடன் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.
போக்குவரத்து பணியாளர்களின் சேமிப்பை ஊக்குவித்தல், கடன் வழங்குதல் உள்ளிட்ட பணிகளை கூட்டுறவு சங்கம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாதம்தோறும் கடன் மனுக்கள் பெறப்பட்டு, கடன் தொகை வழங்குவது வழக்கம். ஆனால், தற்போது கடன் வழங்க முடியாத நிலை இருப்பதாக கூட்டுறவு சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஓராண்டு காலமாக பல சிரமத்துக்கு இடையே உறுப்பினர்களுக்கு மாதம் தவறாமல் கடன் வழங்கி வந்த நிலையில், தற்போது மீண்டும் போக்குவரத்துக் கழகங்கள் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு உறுப்பினர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்த தொகையை கடந்த சில மாதங்களாக வழங்கவில்லை.
அதன்படி, மாநகர போக்குவரத்துக் கழகம் பிப்ரவரி மாதம் முதல் ரூ.8.60 கோடியும், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மண்டலங்கள் கடந்த நவம்பர் மாதம் முதல் 7 மாத தவணைத் தொகை ரூ.13.40 கோடி என மொத்தம் ரூ.22 கோடி வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளன. இதனால் அடிப்படை பணிகளான உறுப்பினர்களுக்கு கடன் வழங்குவது, கணக்கு முடிப்பது போன்ற பணிகளிலும், உறுப்பினர்களின் தேவையை பூர்த்தி செய்வதிலும் கூட்டுறவு சங்கம் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளது.
போக்குவரத்துக் கழகங்களிடம் பிடித்தம் செய்த பணத்தை விரைந்து பெறுவதற்கு உயர்நீதிமன்றத்தில் மீண்டும் சட்டப்பூர்வ நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மே மாதம் விரைவு போக்குவரத்துக் கழக உறுப்பினர்கள் தவிர மற்ற போக்குவரத்துக் கழக உறுப்பினர்களிடமிருந்து கடன் மனு பெறுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
அதே நேரம், உறுப்பினர்களுக்கு சேமிப்புக்கான வட்டி வழங்குவதற்கு விரைவாக முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. உறுப்பினர்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்ய கடும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.