மதுரை: “முதல்வர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு செல்லவில்லை. ஊழல் பணத்தை தொழிலில் முதலீடு செய்யவே அவர் வெளிநாடு சென்றுள்ளார்” என மதுரையில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். மதுரை மாவட்ட பிரச்சார பயணத்தின் 3-வது நாளான இன்று மதுரை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பழங்காநத்ததில் எடப்பாடி பழனிச்சாமி பேசியது: “மதுரை மாவட்டம் அதிமுக கோட்டை. கடந்த தேர்தலில் சூழ்ச்சி செய்து சில தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.
முதல்வர் ஸ்டாலின் அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என கனவு காண்கிறார். அது கனவு பகல் கனவாகவே இருக்கும். மக்களின் ஆதரவை பெற்ற இயக்கம் அதிமுக. அதிமுக ஆட்சியில் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதிமுக தலைமையிலான கூட்டணி வலிமையான, வெற்றிக் கூட்டணியாக இருக்கும்.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டது. குற்றங்கள் நடக்காத நாளே இல்லை. போதைப் பொருள் நடமாட்டத்தால் தமிழகம் மிக மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது. தமிழகத்தில் ஊழல் இல்லாத துறைகளே இல்லை. மாநகராட்சியில் வரி வருவாய் வசூலில் ரூ.200 கோடி அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது. இதற்கு காரணமான மேயரை கைது செய்யாமல் அவர் கணவரை கைது செய்துள்ளனர்.
மதுரை மேயர், அதிகாரிகளை கைது செய்து மக்களின் கொந்தளிப்பை அடக்க வேண்டும். ஊழல்வாதிகளை காப்பாற்ற அரசு முயற்சி செய்கிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்த ஊழல் குறித்து விசாரிக்கப்பட்டு மக்கள் வரிப் பணம் ஒரு ரூபாய் கூட விணாகாமல் கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
வரி வருவாயை மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுக்கு பயன்படுத்த வேண்டும். அதை செய்யாமல் வரி வருவாயை திமுகவினரே பங்கிட்டு கொள்கின்றனர். இந்தச் சூழலில் மதுரை மாநகராட்சி ரூ.260 கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளது. இந்த கடனை மக்கள் தான் திரும்ப செலுத்த வேண்டும். திமுக அரசு ஊழல் அரசு என்பதற்கு மதுரை மாநகராட்சி ஊழல் சாட்சியாக உள்ளது. பணத்தை பங்கு போடுவதில் திமுக கவுன்சிலர்கள் இடையே மோதல் இருப்பதால் கோவை, காஞ்சிபுரம், நெல்லை மாநகராட்சி மேயர்களை மாற்றியுள்ளனர்.
இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு தான். அந்த ஊழல் இப்போதும் தொடர்கிறது. 2026 தேர்தலில் ஊழல் அரசுக்கு முடிவு கட்ட வேண்டும். டாஸ்மாக்கில் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக செய்தி வருகிறது. ஒரு துறையில் மட்டும் இவ்வளவு என்றால் மற்ற துறைகளில் எவ்வளவு ஊழல் நடைபெற்றிருக்கும்? கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் திமுக அரசுக்கு கமிஷன் செல்கிறது.
திமுக ஆட்சியால் மக்களுக்கு எந்தப் பலனும், நன்மையும் இல்லை. மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. ஸ்டாலின் குடும்பம் மட்டும் செல்வ செழிப்புடன் உள்ளது. முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளார். தொழில் முதலீட்டை ஈர்க்க வெளிநாடு சென்றுள்ளதாக கூறுகின்றனர். அதற்காக ஸ்டாலின் வெளிநாடு செல்லவில்லை. ஊழல் பணத்தை தொழிலில் முதலீடு செய்ய ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளார். மக்களை முதல்வர் ஏமாற்றி வருகிறார்.
அதிமுக ஆட்சியில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் அனைத்தும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. திமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 10 சதவீதம் கூட பயன்பாட்டுக்கு வரவில்லை.
திமுக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய கட்சி. கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தவர்கள் திமுகவினர். இந்த ஊழலால் தமிழகத்தின் பெயரை அசிங்கப்படுத்திவிட்டனர். டெல்லிக்கு சென்றால் தலை குணிந்து செல்லும் நிலை திமுகவால் ஏற்பட்டுள்ளது. திமுகவால் இந்தியா முழுவதும் தமிழகத்துக்கு மிகப் பெரிய கெட்டப் பெயர் ஏற்பட்டுள்ளது. அந்தக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது” என்று அவர் பேசினார்.
மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் கே.ராஜூ தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அமைப்புச் செயலாளர் ராஜன்செல்லப்பா, மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் சோலை ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
– கி.மகாராஜன், சுப.ஜனநாயகச்செல்வம்