வந்தவாசி: திமுகவை பொறுத்தவரை ஊழல் செய்வதற்கு தேசிய அளவில் விருது கொடுக்கலாம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்றைய எழுச்சிப் பயணத்தில் ஆரணி, செய்யாறில் மக்களை சந்தித்த பிறகு வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த பெருந்திரளான மக்களிடையே நேற்றிரவு பேசினார். அப்போது அவர், “அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற உள்ளது என்பதற்கு இங்கு கூடி உள்ள மக்களின் எழுச்சியே சாட்சி. பத்தரை மணிக்கும் இவ்வளவு மக்கள் குழுமியிருக்கிறார்கள் என்றால் அதுதான் நம் வெற்றியின் ரகசியம்.
திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டணிக் கட்சிகளை நம்பிக்கொண்டிருக்கிறார். பலமான கூட்டணி என கனவு காண்கிறார். ஆனால் அதிமுக மக்களை நம்பி இருக்கிறது. மக்கள் நினைத்தால்தான் யாரும் ஆட்சிக்கு வர முடியும். ஸ்டாலின் பல கட்சிகளை இணைத்துக்கொண்டு எந்த திட்டமும் கொடுக்காமல், ஊழல் அரசை நடத்துகிறார்.
அதிமுகவின் 10 ஆண்டுகளில் விலைவாசி உயரவே இல்லை. நான் முதல்வராக இருந்த நேரத்தில் வறட்சி, கரோனா, புயல் ஏற்பட்டபோதும் விலைவாசி உயரவில்லை. நிர்வாகத்திறமை மிக்க அரசு அதிமுக என்பதை நிரூபித்தோம். திமுக ஆட்சியில் அப்படி எந்த நிலையும் இல்லை ஆனால் விலைவாசி உயர்ந்துவிட்டது. மளிகைப் பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது.
இவற்றைக் குறைக்க திமுக அரசு எதுவுமே செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் விலை கட்டுப்பாட்டுக்கு நிதி ஒதுக்கினோம், வேறு மாநிலத்தில் இருந்து குறைந்த விலைக்கு பொருட்களை வரவழைத்துக் கொடுத்தோம். இங்கு பொம்மை முதல்வர் ஆள்வதால் மக்கள் படும் துன்பம் தெரியவில்லை. தமிழ்நாட்டில் கட்டுமானப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துவிட்டது. இனி எல்லோரும் கனவில் தான் வீடுகட்ட முடியும்.
எல்லாவற்றிலும் திமுகவுக்கு கமிஷன் கிடைக்கிறது. அதனால் விலை உயர்வு பற்றி திமுக அரசு கவலைப்படவில்லை. கரோனா காலத்தில் ஒரு வருடம் ரேஷனில் விலையில்லா பொருட்கள் கொடுத்தோம். மூன்று நேரம் உணவு கொடுத்தோம். எந்த ஒரு பிரச்னையும் இல்லாமலே திமுக ஆட்சியில் கடன் வாங்குகிறார்கள். நிபுணர் குழு அமைத்ததால், கடன் தான் அதிகமாகிவிட்டது. 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாய் கடன். 73 வருட தமிழக ஆட்சி வரலாற்றின் கடனை விட திமுக அரசின் கடன் அதிகம்.
திமுக அரசுக்கு வருமானம் அதிகரித்துள்ளது. 1 லட்சத்து 38 ஆயிரம் கோடி கூடுதல் வருமானம் வருகிறது என்றாலும் கடன் வாங்குகிறார்கள். அதேநேரம், திட்டம் எதுவும் வரவில்லை. அதுதான் சந்தேகம். இந்த கடனை அடைப்பதற்கு வரி போட்டுத்தான் ஆக வேண்டும். எல்லாம் மக்கள் மீது தான் விடியும்.
இவர் பாட்டுக்கு கடன் வாங்கி வைத்துவிட்டுப் போய்விடுவார், நாளை ஆட்சிக்கு வருபவர்கள் கடும் துன்பத்துக்கு ஆளாக வேண்டும். நாளை அதிமுக ஆட்சி வந்தால் நம்மளைத்தான் சொல்வாங்க. கடன் திருப்பி கட்டலைன்னா விடுவாங்களா? திருப்பிச் செலுத்தலைனா பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
வரிகள் எல்லாம் உயர்த்திவிட்டனர். மின் கட்டணத்தையும் 67% உயர்த்திவிட்டனர். மக்களை நிம்மதியாக வாழ விடாத அரசு திமுக. கரோனா காலத்தில் மாணவர்களின் நலன் காக்க ஆல் பாஸ் போட்டோம். நிறைய கல்லூரிகள் திறந்தோம். கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். அதனால்தான் உயர் கல்வியில் முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்தது.
திமுக ஆட்சியில் இப்படிப்பட்ட திட்டம் எதுவும் கொண்டுவரவில்லை. 207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்ட செய்தியை படித்திருப்பீர்கள். பள்ளியில் சரியான முறையில் பாடம் நடத்தியிருந்தால் மாணவர்களைப் போய் சேர்ப்பார்கள். ஆனால், அங்கு பாடம் நடத்துவது இல்லை, வாத்தியாரும் பள்ளிக்குப் போவதில்லை, அரசும் கண்டுகொள்வதில்லை. அப்படி என்றால் மூடித்தான் ஆக வேண்டும். அதிமுக ஆட்சியில் பள்ளிகளை அதிகம் திறந்தோம், தரம் உயர்த்தினோம்.
தேசிய அளவில் பல துறைகளில் நூற்றுக்கணக்கான விருதுகள் பெற்றுள்ளோம் அதுதான் நல்லாட்சிக்கு சான்று. திமுகவை பொறுத்தவரை ஊழல் செய்வதற்கு தேசிய அளவில் விருது கொடுக்கலாம். டாஸ்மாக்கில் 40 ஆயிரம் கோடி ஊழல் என்று அமலாக்கத்துறை சொல்லியிருக்கிறது. 10 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதில் வருடத்துக்கு 5400 கோடி, நான்காண்டுகளில் 22 ஆயிரம் கோடி கொள்ளை.
இங்கு இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கிறார்கள். அவங்களுக்கு நிறைய திட்டங்கள் கொடுத்தோம். நோன்பு கஞ்சி தயாரிக்க அரிசி, சந்தனக் கட்டை கொடுத்தோம், ஹஜ் மானியம், உலமாக்களுக்கு ஓய்வூதியம், மதிப்பூதியம், இருசக்கர வாகன மானியம், சென்னையில் ஹஜ் இல்லம் கட்ட நிதி, வக்ப் வாரிய கட்டிட நிதி, பள்ளி தர்கா புனரமைப்பு நிதி என்று எக்கச்சக்க திட்டங்களைக் கொடுத்திருக்கோம்.
அப்துல் கலாம் நினைவாக கலை அறிவியல் கல்லூரி, ஹைதர் அலி, திப்பு சுல்தான், காயிதே மில்லத் மணிமண்டபம் எல்லாம் செய்தது நாங்கள். ஆனால் திமுக கூட்டணி தவறான பிரச்சாரம் செய்கிறது. அதிமுக பாஜகவோடு கூட்டு சேர்ந்துவிட்டது, பாதுகாப்பு கொடுக்காது என்கிறார்கள். திமுகவும் கூட பாஜகவுடன் கூட்டணி வைத்து மத்தியில் அங்கம் வகித்தது. அப்போதெல்லாம் பாஜக நல்ல கட்சி, அதிமுக சேர்ந்தால் அவதூறு பேசுகிறார்கள்.
கூட்டணி என்பது சூழ்நிலைக்கு ஏற்ப எதிரிகளைத் தோற்கடிக்க அமைக்கப்படுவது, கொள்கை என்பது நிலையானது. அப்படித்தான் அதிமுக இருக்கிறது. ஸ்டாலின் அவர்களே இனியும் இந்த மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது. மக்கள் தெளிவாகப் புரிந்துகொண்டனர்.
இன்றைக்கும் மக்கள் செல்வாக்குள்ள கட்சி என்றால் அதிமுக என்பது நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்கள் நிறைந்த கட்சி, திமுக தலைவர்கள் நடத்துகின்ற கட்சி. அது கட்சியல்ல கம்பெனி. அதிமுக அப்படியில்ல உழைப்பவருக்கு பதவி கிடைக்கும். அதிமுக ஜனநாயக கட்சி. அதனால்தான் ஒரு விவசாயியான நான், உங்கள் முன் நின்று பேசிக்கொண்டு இருக்கிறேன்.
விவசாயிகளுக்கு நிறைய திட்டங்கள் கொடுத்தோம். பயிர்க்கடன் இரண்டுமுறை தள்ளுபடி, மும்முனை மின்சாரம், பயிர்க்காப்பீடு திட்டம் இழப்பீடு, குடிமராமத்து திட்டம், தடுப்பணைகள் என பல திட்டங்கள் கொடுத்தது அதிமுக அரசு. அதிமுக ஆட்சி அமைந்ததும் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டோர்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும்.
ஒரு விவசாயி உங்களால், தொண்டர்களால், முதல்வராகப் பொறுப்பேற்றபோது எவ்வளவு பிரச்சினையை சந்தித்தேன் என்பது உங்களுக்குத் தெரியும். அவ்வளவு பிரச்சனைகளும் மக்கள் துணையுடன் தூள் தூளாக்கப்பட்டது. எந்த காலத்திலும் அதிமுகவை எவராலும் அழிக்கவே முடியாது.
ஸ்டாலின் அவர்களே நீங்கள் எவ்வளவு அவதாரம் எடுத்துப்பார்த்தீர்கள். அத்தனையும் உடைக்கப்பட்டு பலம் பொருந்திய மக்கள் செல்வாக்குள்ள கட்சியாக இன்றும் அதிமுக உள்ளது. ஆனால், திமுகவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை, அதனால்தான் வீடுவீடாகப் போய் உறுப்பினராகச் சேருங்கள் என்று பிச்சை எடுக்கிறார்கள். வெட்கமாக இல்லையா..? இந்தியாவில், தமிழ்நாட்டில் எங்காவது இப்படி ஒரு சம்பவம் நடந்தது உண்டா? ஸ்டாலின் காண்பது பகல் கனவு, அதிமுக பலம் வாய்ந்த கூட்டணியாக அமையும். அதிமுக பெரும்பான்மையோடு வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம். பைபை ஸ்டாலின்…“ என்று முடித்தார்.