சென்னை: மெட்ரோ ரயில் பயணச் சீட்டுகளை ஊபர் செயலியில் பெறும் வசதி தொடங்கப்பட்டுள்ளது. 2-ம் கட்ட மெட்ரோ திட்டத்தில் ஒரு வழித்தடத்தில் டிசம்பர் மாதத்தில் ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர் மு.அ.சித்திக் தெரிவித்தார்.
சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மெட்ரோஸில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊபர் (UBER) செயலி மூலம் மெட்ரோ ரயில் பயணச்சீட்டு பெரும் வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண் இயக்குநர் மு.அ.சித்திக் தொடங்கிவைத்தார்.
சென்னை மெட்ரோ, ஒஎன்டிசி மற்றும் ஊபர் நிறுவனங்கள் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளன. இதில் சென்னையில் உள்ள ஊபர் பயனாளர்கள், க்யூஆர் அடிப்படையிலான பயணச்சீட்டுகளை பெறுவதோடு மெட்ரோ பயண தகவல்களையும் ஊபர் செயலியில் தெரிந்து கொள்ளலாம். அறிமுகச் சலுகையாக இந்த ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஊபர் செயலியைப் பயன்படுத்தி மெட்ரோ பயணச்சீட்டுகளை வாங்கும் பயணிகள் 50 சதவீதம் தள்ளுபடி பெறலாம்.
மேலும் மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து வேறு இடத்துக்கோ வேறு இடத்திலிருந்து மெட்ரோ ரயில் நிலையம் வரையிலோ பயணிக்க ஊபர் செயலியில் கார், ஆட்டோ, பைக் புக் செய்தால் அதிலும் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
கிளாம்பாக்கம் வரை மெட்ரோ: நிகழ்ச்சிக்குப் பின் சென்னை மெட்ரோ ரயில் மேலாண் இயக்குநர் சித்திக் நிருபர்களிடம் கூறியதாவது: மெட்ரோ ரயில் மக்களைச் சென்றடைய வேண்டும் எனத் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். வாட்ஸ்-அப், டிஜிட்டல் பரிவர்த்தனை செயலிகள் எனப் பல வழிகளில் மெட்ரோ பயணச்சீட்டுகளை வழங்கி வருகிறோம். தற்போது ஊபர் உடன் இணைந்துள்ளோம். இந்த சேவையை வழங்க நாங்கள் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை.
அவர்கள்தான் எங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். எங்களுடைய பயணச்சீட்டு நடைமுறைகளை கோரி அதற்கு ஏற்றார் போல்யார் வேண்டுமானாலும் வந்து மெட்ரோவுடன் இணைந்து பணியாற்றலாம். கூகுள் மேப்ஸையும் இணைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரையிலான மெட்ரோ ரயில் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். அது பரிசீலனையில் உள்ளது.
மத்திய அரசின் ஒப்புதலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். நிச்சயம் ஒப்புதல் கிடைக்கும். அதற்கு தேவையான நிலம் எடுக்கும் பணிகளும் மற்ற பணிகளும் நடைபெற்று வருகின்றன. சென்னையில் வாட்டர் மெட்ரோ சாத்தியம் தான்.
நெடுஞ்சாலைத் துறையும், சிறு துறைமுகங்கள் துறையும் அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளன; பொறுத்திருந்து பார்ப்போம். மதுரை, கோவை நிலம் எடுப்பு கடற்கரை – வேளச்சேரி பறக்கும் ரயில் சேவை 2 ஆண்டுகளில் படிப்படியாக மெட்ரோவிடம் மாற்றப்படும். இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.
முதலில் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். அதைத் தொடர்ந்து ரயில் பெட்டிகளை மாற்றுவது என பணிகள் மேற்கொள்ளப்படும். முழுமையாகப் பணிகள் முடிய இரண்டரை ஆண்டுகளாகும். அதுவரை புறநகர் ரயில்கள் வழக்கம்போல இயங்கும். மதுரை, கோவையில் நிலம் எடுப்பு பணிகளுக்கு 2 ஆண்டுகள் ஆகும். இப்போது நிலத்தை அடையாளம் காணும் பணி, அரசின் ஒப்புதலைப் பெறுவது ஆகிய பணிகளைத் தொடங்கிவிட்டோம்.
மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்க காலதாமதம் ஏதும் இல்லை; வழக்கமான காலம்தான் எடுக்கிறது. 2-ம் கட்ட மெட்ரோ பணியில் ஒரு வழித்தடம் டிசம்பர் மாதம் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அடுத்தடுத்த 6 மாதங்களில் அடுத்தடுத்த வழித்தடங்களை பயன்பாட்டுக்குக் கொண்டு வருவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அமைப்புகள் மற்றும் இயக்கம் இயக்குநர் மனோஜ் கோயல், தலைமை ஆலோசகர் கோபிநாத் மல்லையா (இயக்கம் மற்றும் பராமரிப்பு). தொழில்நுட்ப ஆலோசகர் மனோகரன், ஊபர் நிறுவனத்தின் மூத்த இயக்குநர் மணிகண்டன் தங்கரத்தினம், ஒஎன்டிசி நிறுவனத்தின் துணைத் தலைவர் நிதின் நாயர், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் ஊபர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.