திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி குப்பையை வெள்ளியம்பாளையம் ஊராட்சி பாறைக்குழியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை குண்டுக்கட்டாக போலீஸார் கைது செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி சார்பில் குப்பை கொட்டுவதற்கு பல்வேறு பகுதிகளில் பயன்பாடற்ற பாறைக்குழிகளை தேர்வு செய்து குப்பை கொட்டப்பட்டு வந்தது. இதையடுத்து திருப்பூர் மாநகரை ஒட்டிய காளம் பாளையம், பொங்குபாளையம் என பல்வேறு பகுதிகளில் மாநகராட்சி குப்பை கொட்டுவதற்கு பொதுமக்கள் கடும் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதன் காரணமாக திருப்பூர் மாநகர் பகுதிகளில் சுமார் 15 நாட்களுக்கு மேலாக குப்பை எடுக்காமல் அனைத்து பகுதிகளுமே குப்பை மலை போல தேங்கி இருக்கிறது.
திருப்பூர் மாநகரில் சுமார் 20,000 டன் குப்பை தேங்கி இருப்பதாக பல்வேறு கட்சிகளால் குற்றம் சாட்டப்படும் நிலையில், திருப்பூர் மாநகராட்சி குப்பையை ஊத்துக்குளி வட்டம் வெள்ளியம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பயன்பாடற்ற பாறைக்குழியில் மாநகராட்சி சார்பில் இன்று ( ஆக.19) காலை சுமார் பத்துக்கும் மேற்பட்ட குப்பை லாரிகள், குப்பை கொட்டுவதற்கு வந்தன. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் லாரிகளை சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியல் போராட்டத்தினால் திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காலை நேரத்தில் நடந்த இந்த போராட்டத்தின் காரணமாக, வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களிடம் போலீஸார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீஸார் குண்டுக்கட்டாக வாகனத்தில் ஏற்றி கைது செய்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஆட்சேபம் தெரிவித்தனர்.
போலீஸார் மற்றும் திருப்பூர் மாநகராட்சிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களை தனியார் மண்டபத்தில் அடைத்தனர். போராட்ட களத்தில் இருந்த பெண்களும் ஆவேசமாக தாங்களாகவே வந்து கைதாகினர். குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டு போலீஸார் கைது செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.குமார், “திருப்பூர் மாநகராட்சியில் சேகரமாகும் தினசரி பல நூறு டன்கள் குப்பையை அறிவியல் பூர்வமாக திடக்கழிவு மேலாண்மையை நடத்துவதற்கு உருப்படியான திட்டம் ஏதும் இல்லாத திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம், தேவையற்ற திட்டங்களுக்கு மாநகராட்சி பணத்தை விரயம் செய்யும் மாநகராட்சி நிர்வாகம், அனைத்து பொதுமக்களை நன்மைக்காக ஒரு விரிவான திடக்கழிவு திட்டத்தை போர்க்கால அடிப்படையில் உருவாக்குவதற்கு தயார் இல்லை.
உலக நாடுகளில் வெற்றிகரமான திடக்கழிவு திட்டங்கள் பல பெரு நகரங்களில் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த பாடங்களில் இருந்து கற்றுக்கொண்டு இங்கே முற்போக்கான புதிய திடக்கழிவை திட்டங்களை திருப்பூர் மாநகராட்சியும் தமிழக அரசும் உருவாக்க தயார் இல்லை. திருப்பூர் புறநகர் மாவட்ட பகுதிகளில் சென்று கைவிடப்பட்ட பாறைகளில் கொட்டி அந்த பகுதி சுற்றுச்சூழலை கெடுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
ஏற்கனவே பொங்கு பாளையம், நெருப்பெரிச்சல், பூமலூர், சுக்கம்பாளையம், கீரனூர் போன்ற பகுதிகளில் குப்பைகளை கொண்டு சென்று பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக திரும்ப வந்த மாநகராட்சி நிர்வாகம், இன்று ஊத்துக்குளி வட்டம், முரட்டுபாளையம் கிராமம்,வெள்ளியம்பாளையம் அருகில் இருக்கும் பாறைகளில் குப்பை கொட்டுவதற்கு பத்து லாரிகளில் கொண்டு வந்துள்ளதை இந்த பகுதி பொதுமக்கள் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த பாறை குழிகளில் குப்பையை கொட்டி நிரப்பினால் அருகில் அணைப்பாளையம் குளம் தண்ணீர் நிற்கின்றது .
ராக்கிய பாளையம் கிராமம், அணைப்பாளையம் கிராமம், பல்லவராயன் பாளையம் கிராமம் பெரியபாளையம் கிராமம் , முரட்டு பாளையம் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள விவசாயி கிணர்களும் குடிநீர் ஆதாரங்களும் நீர் மாசுபட்டு கடுமையான பாதிப்புக்கு உள்ளாக வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
ஆகவே திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் இங்கே குப்பை கொட்டுவதை கைவிட வேண்டும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் திருப்பூர் மாநகராட்சி இப்படிபட்ட பிற்போக்கு சிந்தனையை கொண்டு ஒவ்வொரு பகுதிக்கு சென்று அந்த பகுதி மக்களை பதற்றத்திற்கு உள்ளாக்குவதும் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த வேண்டிய நிர்பந்தத்தை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதும், ஒரு அரசு நிர்வாகம் செய்ய வேண்டிய செயல் அல்ல என்பதையும் இந்த நேரத்திலேயே சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கின்றோம்.
ஆகவே இன்று முரட்டுப்பாளையம் ஊராட்சி வெள்ளியம்பாளையம் பாறைக்குயில் குப்பை கொட்டும் உத்தரவை திரும்பப் பெற்று கொண்டு, எடுத்து வந்த குப்பையை திரும்ப எடுத்துச் செல்ல வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருப்பூர் மாவட்ட குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்