லக்னோ: உத்தர பிரதேசம் லக்னோவில் மால்ஹார் பகுதியில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் 2-ம் ஆண்டு பிஏ எல்எல்பி படிக்கும் மாணவர் ஷிகார் முகேஷ். இவரை அவருடன் படிக்கும் சவுமியா சிங் யாதவ் என்ற மாணவி தனது காரில் கடந்த மாதம் 26-ம் தேதி பல்கலைக்கழகத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு சக மாணவர்கள் சிலர் காரில் ஏறி ஷிகார் முகேஷுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின் ஜான்வி மிஸ்ரா என்ற மாணவி, ஷிகார் முகேஷிடம், என்னை பற்றி என்ன கூறினாய்? என கேட்டு கன்னத்தில் தொடர்ந்து அறைந்தார். அதன்பின் சக மாணவர்களும் முகேஷை தாக்கினர். இந்த தாக்குதல் காட்சியை மிலே பானர்ஜி, விவேக் சிங் ஆகியோர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து மற்ற மாணவர்களுடன் பகிர்ந்தனர்.
இதுகுறித்து முகேஷின் தந்தை முகேஷ் கேசர்வானி அளித்த புகாரின் அடிப்படையில் 5 மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். ஆனால் அமிட்டி பல்கலைக்கழக நிர்வாகம் இதுவரை பதில் அளிக்கவில்லை.