சென்னை: இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் உழைப்பாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என அரசியல் தலைவர்கள் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: ஒளிமயமான எதிர்காலத்துக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு, தளர்வறியா உழைப்பின் மூலம் நம் நாட்டின் பெருமையை உயர்த்தி வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: இந்தியாவின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் உழைப்பாளர்களின் கோரிக்கைகள் வென்றெடுக்கப்பட வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: தொழிலாளர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்கள் தங்களது உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில், குரல் எழுப்பும் நாளாக மே 1-ம் தேதி அமைய வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: அமைப்புசாரா தொழிலாளர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாயமாக வழங்கப்பட வேண்டிய உரிமைகளும், அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: அடக்குமுறையை எதிர்த்தும், சர்வாதிகாரத்தை எதிர்த்தும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தொழிலாளர்கள் ரத்தம் சிந்தினார்கள். தியாகம் செய்து பெற்ற உரிமையைப் பேணிப் பாதுகாக்க இந்த மே நாளில் உறுதியேற்போம்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: வறுமையை ஒழித்து எல்லோருக்கும் எல்லா நலமும், வளமும் கிடைத்திட இந்த மே தின நன்னாளில் சூளுரைப்போம்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன்: எப்போதும் மதம், வழிபாட்டுத் தலம், சிறுபான்மை அபாயம், தேசியவாதம் என்று மட்டுமே போலியாக பேசி, பரவ முயற்சிக்கும் பெரும்பான்மை மத பாசிசத்தை முறியடித்து, ஜனநாயகத்தை பாதுகாக்க உறுதி ஏற்போம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: பாஜக ஆட்சியாளர்களின் முதலாளித்துவ கொள்ளை லாபத்துக்கு உதவிடும் சட்டத் திருத்தங்களை முறியடிக்கும் வகையில், மே 20-ம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி, மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் முன்னாள் எம்.பி. சு.திருநாவுக்கரசர், கொமதேக பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், தமிழ்நாடு ஐஎன்டியூசி செகரட்டரி ஜெனரல் மு.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.