மதுரை/ கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை விபத்து தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒரு சார்புடை யதாகவும், முன்னுக்குப்பின் முரணாக உள்ளது எனவும் மதுரை ஆதீனம் மடம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உளுந்தூர்பேட்டை விபத்து தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையை மறுக்கிறோம். அதில் விபத்து தொடர்பாக ஆதீனம் தரப்பில் எந்தப் புகாரும் அளிக்கவில்லை என கூறப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த அடுத்த நிமிடமே காவல்துறையின் அவசர உதவி எண் 100-க்கு தகவல் கொடுக்கப்பட் டது. பின்னர் உளவுப் பிரிவு அதி காரிக்கும், உளுந்தூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. மாலையில் உளவுத் துறை டிஎஸ்பி எங்களிடம் பேசி சம்பவம் குறித்து தெரிந்து கொண்டார்.
எங்கள் கார் சென்ற சாலை, எந்தவித தடுப்புகளும் இல்லாமல் சீராக இருந்தது. சேலம் – சென்னை சாலையில் தற்காலிக தடுப்புகள் இருந்தன. அப்படியிருந்தும் வேகமாக வந்த கார் எங்கள் கார் மீது மோதியது. அந்த வாகனத்தில் பதிவு எண் இல்லை. காரில் இரண்டு முஸ்லிம்கள் இருந்தனர். போலீஸாரிடம் தகவல் தெரிவிப்பதாகக் கூறியதைக் கேட்டதும் அவர்கள் அங்கிருந்து நகர்ந்து விட்டனர். சம்பவம் நடந்து 26 மணி நேரம் கடந்தும் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
காவல்துறையின் விளக்க அறிக்கையில் எங்களைப் பற்றியும், எங்கள் தரப்பு வாகனம் பற்றியும் முழு விவரங்கள் இருந்தன. ஆனால் எதிர் தரப்பு வாகனம் மற்றும் அதில் பயணம் செய்தவர்கள் பற்றியும், தடுப்புகளைத் தாண்டி மோதியது, அந்த காரில் பதிவு எண் இல்லை என நாங்கள் குற்றம்சாட்டியது குறித்து எதுவும் கூறாதது வருத்தம் அளிக்கிறது.
தோற்றம் உருவாக்கம்: பின்னர் முபாரக் அலி என்பவரின் புகாரின் பேரில் இரு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. சம்பவம் தொடர்பாக 15 முறை போலீஸாரிடம் தகவல் அளித்தும், போலீஸார் எங்களிடம் பேசி தகவல் சேகரித்த போதிலும் மதுரை ஆதீனம் மீதுதான் முழு தவறும் உள்ளது என்ற தோற்றத்தை உருவாக்கியது வேதனை அளிக்கிறது.
விபத்தை ஏற்படுத்திய காரில் 2 பேர் மட்டுமே சென்றனர். ஆனால் குடும்பத்துடன் பயணம் செய்ததாக முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளனர். மேலும், பக்கவாட்டில் வந்து மோதியதை மறைக்கும்வகையில் சீராக இருந்த சாலையில் பயணம் செய்த நாங்கள்தான் விபத்து ஏற்படுத்தியது போல் கூறுவது ஏற்புடையது அல்ல. உளுந்தூர்பேட்டை காவல்துறையின் விளக்க அறிக்கை, முன்னுக்குப் பின் முரணாக உள்ளது. ஒருபக்கச் சார்புடையதாகக் கருதுகிறோம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆதீனத்தின் கார் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளில் வழக்கு: பதிவுவாகன விபத்து வழக்கில், மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர் மீது உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீஸார் நேற்று 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்தனர். கடந்த 2-ம் தேதி மதுரை ஆதீனத்தின் காருடன் விபத்துக்குள்ளான மற்றொரு காரின் ஓட்டுநர் முபாரக் அலி, உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதில், “மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர், போக்குவரத்து விதிமுறைகளை மீறி அதிவேகமாகவும், அலட்சியமாகவும், அஜாக்கிரதையாகவும் காரை ஓட்டி வந்ததார்” என தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை காவல் நிலைய போலீஸார் விசாரணை செய்து, மதுரை ஆதீனம் சென்ற காரின் ஓட்டுநர் மீது நேற்று 2 பிரிவுகளில் விபத்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.