சென்னை: உலக மக்கள்தொகை தினத்தையொட்டி, சுகாதாரத் துறை சார்பில் பேரணி, விழிப்புணர்வு போட்டி, கருத்தரங்கம் நடைபெற்றன.
39-வது உலக மக்கள்தொகை தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, செம்மொழி பூங்காவில் விழிப்புணர்வு பேரணியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் பேரணி நிறைவடைந்தது. பின்னர், அமைச்சர் தலைமையில்அதிகாரிகள், ஊழியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து கருத்தரங்கம் நடந்தது. இளம் பருவத்தினருக்கான விழிப்புணர்வு நல கையேடு, குடும்பநல விளக்க கையேடுகளை வெளியிட்ட அமைச்சர், விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற செவிலிய மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ், கேடயங்களை வழங்கினார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:‘ஆரோக்கியமான போதிய இடைவெளியுடன் பிள்ளைப் பேறு, திட்டமிட்ட பெற்றோருக்கான அடையாளம்’ என்பதே இந்த ஆண்டின் மக்கள்தொகை தின கருப் பொருள். தமிழக சுகாதாரத் துறை எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால், பேறு காலத்தில் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம் 39.4 சதவீதம் அளவுக்குகுறைந்துள்ளது. சிசு உயிரிழப்பு விகிதம் 1,000-க்கு 7.7 என்ற அளவில் குறைந்துள்ளது.
கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைதிருமணம் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான விழிப்புணர்வுக்காக இளம் பருவத்தினருக்கான கையேடு, குடும்ப நலத்திட்ட கையேடு வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சுகாதாரத் துறை செயலர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் வினீத், குடும்ப நலஇயக்குநர் சித்ரா, மருத்துவக்கல்வி, ஆராய்ச்சி இயக்குநர் (பொ) தேரணிராஜன், பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துதுறை கூடுதல் இயக்குநர் சோமசுந்தரம், துணை இயக்குநர்சங்கரேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.