விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற செஞ்சி கோட்டையை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.
மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் ராணுவ தளங்களாக இருந்த 12 கோட்டைகளில் ஒன்று தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டை. இந்த கோட்டையை யுனெஸ்கோ பிரதிநிதி ஹவாஜங் லீ ஜெகாம்ஸ் கடந்த 2024 செப்டம்பர் மாதம் கள ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தார்.
இதை தொடர்ந்து, செஞ்சி கோட்டை உள்ளிட்ட 12 கோட்டைகளையும் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் யுனெஸ்கோ இணைத்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுவின் 47-வது அமர்வில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டை 3 குன்றுகளில் அமைந்துள்ளது. இது 13-ம் நூற்றாண்டில் உருவானது. தமிழக மன்னர்களின் பங்களிப்புடன், அவ்வப்போது பொலிவு பெற்று வந்துள்ளது. கோயில்கள், அகழி, படைவீடுகள், வெடிமருந்து கிடங்கு, பீரங்கி மேடை என பல அம்சங்களை கொண்டது.
அதன் வரலாறு குறித்து வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது: தென்னிந்தியாவின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கோட்டைகளில் ஒன்றாக திகழ்ந்த செஞ்சி கோட்டை கி.பி 13-ம் நூற்றாண்டு முதல் வெவ்வேறு காலகட்டங்களில் பல ஆட்சியாளர்களால் பல்வேறு மாற்றங்களை சந்தித்தது.
பீஜப்பூர் சுல்தான்களிடம் இருந்து கி.பி.1677-ல் செஞ்சி கோட்டையை கைப்பற்றினார் மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜி. இவரது ஆளுகையில் 20 ஆண்டுகள் இருந்தது. கைப்பற்றிய கோட்டையில் சிவாஜி சிறிது காலம் தங்கியுள்ளார். அப்போது, கோட்டை அரண்களை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தி உள்ளார். அப்போது செஞ்சிக்கு வந்த பிரான்சிஸ் மார்ட்டின் இதை பதிவு செய்துள்ளார். ஐரோப்பிய பொறியாளர்களே வியக்கும் வகையில் சிவாஜி இங்கு புதியஅரண்களை கட்டினார். அகழிகளை தோண்டினார். கோபுரங்களை உயர்த்தினார். நீர்த்தேக்கங்கள் அமைத்தார் என்று 1678-ல் இங்கு வந்த கிறிஸ்தவ பாதிரியார் ஆன்ட்ரூ பிரைரா விரிவாக பதிவு செய்துள்ளார்.
சிவாஜியின் ஆளுகையில்தான் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையாக இது மாறியது. மராட்டியர்களிடம் இருந்து செஞ்சியை கைப்பற்ற முகலாயர்கள் 7 ஆண்டுகாலம் முற்றுகையில் ஈடுபட வேண்டியதாக இருந்தது. பல நூற்றாண்டுகள் பழமையான செஞ்சி கோட்டை, யுனெஸ்கோவின் இந்த அங்கீகாரத்தால் உலக சுற்றுலா பயணிகளின் கவனத்தை பெரிதும் ஈர்க்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்: முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: ‘கிழக்கின் ட்ராய்’ என அறியப்படும் செஞ்சி கோட்டை, இந்தியாவில் உள்ள மராட்டிய ராணுவ தளங்களின் ஒரு பகுதியாக யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சோழர் கோயில்கள், மாமல்லபுரம், நீலகிரி மலை ரயில், மேற்குதொடர்ச்சி மலை ஆகியவற்றின் வரிசையில் தமிழகத்தில் இருந்து கம்பீரமான செஞ்சி மலைக்கோட்டை இப்பட்டியலில் இணைந்துள்ளது. தமிழகத்துக்கும், அதன் நிலைத்த பண்பாட்டு மரபுக்கும் பெருமித தருணமாக இது அமைந்துள்ளது.