சென்னை: சென்னையில் வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறைக்கான சர்வதேச மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகம் உலகை ஈர்க்கும் மாநிலமாக உயர்ந்திருக்கிறது என்று தெரிவித்தார்.
சென்னையில், டிட்கோ, பிசிஐ ஏரோஸ்பேஸ் (பிரான்ஸ்), மற்றும் தமிழ்நாடு ஏரோஸ்பேஸ் தொழில் வளர்ச்சி கூட்டமைப்பு இணைந்து நடத்தும் வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்துறை சார்ந்த நிறுவனங்களுக்கான – ஏரோ-டெஃப்-கான் 25 (AeroDefCon 2025) என்ற மூன்று நாள் சர்வதேச மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் 19 நாடுகள் மற்றும் 300 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
தொழில்துறை, கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கிடையே 5,000-க்கும் மேற்பட்ட வணிக சந்திப்பு கூட்டங்களும் நடைபெறுகின்றன. இம்மாநாட்டின் கண்காட்சியில் முன்னணி நிறுவனங்கள், நடுத்தர ரக நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் அரங்குகளை அமைத்துள்ளன.
மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்துறை சார்ந்த நிறுவனங்களுக்கான – ஏரோ-டெஃப்-கான் 25 என்ற இந்த மாநாட்டை தமிழகத்தில் முதன்முறையாக நாம் தொடங்கி வைத்திருக்கிறோம். தமிழகம் இன்றைய தினம், இந்தியாவை ஈர்க்கும் நிலையில் இருந்து, உலகை ஈர்க்கும் மாநிலமாக உயர்ந்திருக்கிறது. இப்படிப்பட்ட முன்னோடியான மாநாடுகளை நம்முடைய தொழில்துறை சார்பில் நடத்துவதால்தான், இந்த மாநாடுகள் எல்லாம், உலகளவில் பேசப்படுகிறது. மேலும், அனைத்துவிதமான வளர்ந்துவரும் தொழில்களையும் கொண்ட மாநிலமாக தமிழகம் இருப்பதன் அடையாளம்தான் இந்த மாநாடு. இது வெறும் கண்காட்சி இல்லை. புதிய தொழில்நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள் ஆகியோரை கண்டறிந்து, அவர்களிடையேகூட்டு முயற்சியில் புதிய தொழில் ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதற்கான தளம்.
தமிழகம் உற்பத்தி துறையில் லீடராக மாறிக்கொண்டு வருகிறது. தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் எதிர்காலத்தில் முக்கிய பங்காற்ற இருக்கிறது. உயர்தர ஜெட் இன்ஜின் பாகங்களில் இருந்து, டிரோன்கள் உற்பத்தி வரை நடைபெற இருக்கிறது. வளர்ந்துவரும் விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த உற்பத்தி பிரிவுகள் இதில் இருக்கின்றன. தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடத் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியதில் இருந்து, இதுவரை ரூ.23 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டிருக்கின்றன. இதில், ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டிருக்கிறது. 2032-க்குள், ரூ.75 ஆயிரம் கோடி முதலீட்டை ஈர்க்க நாங்கள் இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். இந்த வழித்தடத்தில் இருக்கும், ஒவ்வொரு நகரமும் தனித்துவமான மையங்களாக விளங்குகின்றன.
இந்த நிகழ்வில். எங்க ளோடு இணைந்திருக்கும் 19-க்கும் மேற்பட்ட நாடுகளுடன் சேர்ந்து, தொழில் வளர்ச்சிக்காக செயல்படுவோம். வடிவமைப்பு, மேம்பாடு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றுக்கான முன்னணி தளமாக தமிழகம் திகழ வேண்டும். அதற்கு பெரும் ஆதரவும் தேவை. வானூர்தி, விண்வெளி, கப்பல் உற்பத்தி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் புதுமைகள் நிறைந்த, ஏற்றுமதிக்கு உகந்த, தன்னிறைவு பெற்ற, இந்தியாவை உருவாக்க பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் அறிவியலாளர்களுக்கும், தொழில் முனைவோருக்கும், முதலீட்டாளர்களுக்கும் தமிழக அரசு எப்போதும் துணை நிற்கும். இந்தியாவின் பாதுகாப்பை மட்டுமல்ல, உலக அமைதி, வளம் மற்றும் முன்னேற்றத்தை இயக்கும் ஆற்றலாகவும் தமிழகம் திகழும். இவ்வாறு அவர் பேசினார்.
தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசும்போது, “தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தடம் திட்டத்தில் சர்வதேச தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்து இணைந்து செயல்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் மூலம் பாதுகாப்பு, சோதனை மற்றும் ஒருங்கிணைப்பு மையங்கள் அமைக்கப்படும். புதிய தொழில்துறை பூங்காக்கள் உருவாக்கப்படும். அடுத்ததாக 2027-ல் நடைபெறும் மாநாடு இன்னும் பெரிய அளவில் நடத்தப்படும்” என்றார்.
இந்த மாநாட்டில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பாலு எம்.பி., இ.கருணாநிதி எம்எல்ஏ, கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் பரமேஷ் சிவமணி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் விஞ்ஞானி பி.கே. தாஸ், தொழில் துறை செயலாளர் வி.அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவன மேலாண்மை இயக்குநர் தாரேஷ் அகமது, டிட்கோ மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, பிசிஐ ஏரோஸ்பேஸ் முதன்மை செயல் அலுவலர் ஸ்டீபன் காஸ்டெட், மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.