கோவை: ‘பாரதம் எப்போதும் அன்புடன் அரவணைத்து, உலகை வழி நடத்துகிறது’ என, கோவையில் நடந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்தார்.
கோவை பேரூர் ஆதீனம் மறைந்த ராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழா மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டு விழா, பேரூர் மடத்தில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ராகுல்ராஜா வரவேற்றார். சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தொடக்க உரையாற்றினார்.
தொடர்ந்து, உலக நன்மைக்காக நடத்தப்பட்ட வேள்வியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பங்கேற்று, ராமலிங்கேஸ்வரருக்கு புனித நீர் ஊற்றி பூஜை செய்தார்.
விழாவில் மோகன் பாகவத் பேசும்போது, “அனைவரும் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இமயமலையின் இரு கரங்கள் மற்றும் கடல்களால் சூழப்பட்டுள்ளது பாரத நாடு. உலகம் எப்போதெல்லாம் தர்மத்தை மறைக்கிறதோ, அப்போது அதனை நினைவுபடுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது. பாரதம் எப்போதும் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கவில்லை. அன்புடன் அரவணைத்து, உலகை வழி நடத்துகிறது.
சமூக நல்லிணக்கம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, தற்சார்பு பொருளாதாரம், குடும்பங்களைப் பேணுதல் உள்ளிட்ட சங்கம் மேற்கொள்ளும் 5 முக்கிய பணிகளை, பேரூர் ஆதீனமும் மேற்கொண்டு வருகிறது. இதில் நம் அனைவரின் பங்களிப்பும் அவசியம்” என்றார். அதைத்தொடர்ந்து, பேரூர் படித்துறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள தர்ப்பண மண்டபத்தை பார்வையிட்டார்.
முன்னதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நல்லறம் அறக்கட்டளை தலைவர் அன்பரசன் ஆகியோர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்துக்கு வெள்ளி வேல் மற்றும் சிறிய முருகன் சிலையை வழங்கினர். பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாருக்கு, மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வேல் வழங்கினார். சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகளுக்கு, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வேல் வழங்கினார்.
இவ்விழாவில் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சின்மயா மிஷன் மித்ரானந்தா ஆகியோர் சொற்பொழிவாற்றினர். இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், மேகாலயா மாநில முன்னாள் ஆளுநர் சண்முகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா முடிந்தபின், மோகன் பாகவத் நேற்று மாலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.