சென்னை: இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் படத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். உலகின் அனைத்து நாடுகளும் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக ‘டிஎன் ரைசிங்’ என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின், ஐரோப்பிய பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனியை தொடர்ந்து இங்கிலாந்து சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா, கருத்தரங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றார். பெரியார் உருவப்படத்தை திறந்து வைத்தார்.
வரலாற்று ஆய்வாளர் ஆ.இரா.வெங்கடாசலபதி, முனைவர் கார்த்திக் ராம் மனோகரன்தொகுத்துள்ள ‘தி கேம்பிரிட்ஜ் கம்பேனியன் டூ பெரியார்’ மற்றும் இளம் ஆய்வாளரான விக்னேஷ் கார்த்திக் ஆய்வு நடையில் வெளிப்படுத்தியுள்ள ‘தி டிரவிடியன் பாத்வே’ என்ற நூலையும் வெளியிட்டார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்ததை, எனது வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன். பெரியாரின் சிந்தனைகள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. பகுத்தறிவும், அறிவியலும் ஒரே நேர்கோட்டில் இருக்கும். அறிவின் கூர்மைதான் பகுத்தறிவு என்று எடுத்துச் சொன்னதால்தான், அவர் மறைந்து இத்தனை ஆண்டுகள் கழித்தும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அவரைப் பற்றி விவாதிக்கிறது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் புத்தகம் வெளியிடுகிறது.
உலகம் எத்தனையோ சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகளை பார்த்திருக்கிறது. எத்தனையோ புரட்சிகரமான சிந்தனைகளை அவர்கள் பேசியிருக்கிறார்கள். ஆனால், அந்த சிந்தனைகளை செயல்வடிவமாக்கும் ஆட்சியாளர்கள் இருக்க மாட்டார்கள். தமிழகத்தில் மட்டும்தான், ஒரு சீர்திருத்த இயக்கம், அரசியல் இயக்கமாக எழுச்சி பெற்று, மக்களின் ஆதரவை வாக்குகளாக பெற்று, சீர்திருத்த கருத்துகளை நடைமுறைப்படுத்தி, அவற்றை சட்டமாகவும் ஆக்கி அந்த சமுதாயத்தை மேன்மையடைய வைத்துள்ளது.
நாடே வியந்து பார்க்கும் அளவுக்கு கல்வி, பொருளாதாரம், தொழில், வாழ்க்கைத்தரம், உள்கட்டமைப்பு என அனைத்திலும் தமிழகம் முன்னேறியுள்ளது. இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை.
பெரியார் கண்ட கனவுகள் எல்லாவற்றையும் நாம் நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்லமாட்டேன். பயணம் நெடியது. நாம் செல்ல வேண்டிய தூரம் இன்னும் இருக்கிறது. இந்த பயணத்தில் ஏற்படும் தேக்கங்கள், தேவையற்ற இடைஞ்சல்கள், பழைய குளறுபடிகளை நாம் ஒதுக்க வேண்டும். போலி பெருமையில் சிக்கி மீண்டும் பின்னோக்கி போய்விட கூடாது.
பெரியாரின் சிந்தனைகள் உலகம் முழுவதும் பரவ வேண்டும். அனைத்து விதமான ஒடுக்குமுறைகளையும் களையவேண்டும். சமூக உரிமைகள் முதல் தனிமனித உரிமைகள் வரை அனைத்தும் நிலைநாட்டப்படவேண்டும்.
ஒவ்வொரு பிரிவினரின் உரிமையையும் இடஒதுக்கீடு என்ற உரிமை மூலமாக நிலைநாட்டி உள்ளோம். அதேபோன்ற இடஒதுக்கீட்டு கொள்கையை அனைத்து நாடுகளும், ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு வழங்கவேண்டும். சமூக உரிமையில் அக்கறை கொண்ட அமைப்புகள் இதை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.