சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பணியாற்றி வரும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிகார அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறார். இது குறித்து உச்ச நீதிமன்றம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பணியாற்றி வரும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்குகிற தீர்ப்புகளின் தன்மை அரசியல் சாசன நெறிகளிலிருந்து பிறழ்ந்து, அநீதி இழைப்பதாக வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கருதுகிறார். அவர் கண்டறிந்த உண்மைகளை ஆதாரங்களுடன் ஒரு புகாராக எழுதி சட்டம் விதிகளை பின்பற்றி உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்புகிறார். அவ்வாறு மிக கண்ணியமாக, நாணயமாக, நேர்மையான வழியில் புகார் எழுதியதை அவர் சாதாரண பேச்சுகளிலோ, வேறு வகைகளிலோ ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை என உறுதியாகக் கூறுகிறார்.
அவரது புகாரை பரிசீலித்து ஏற்பதா அல்லது நிராகரிப்பதா என்று முடிவு செய்வது உச்ச நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்கு உள்ளிட்ட பணியாகும். இந்த நிலையில் நீதிமன்றத்தில் வேறு வழக்குக்காக, உயர்நீதிமன்றம் வந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதனிடம் புகார் எழுதியது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் நீதிபதி சுவாமிநாதன். மக்களுக்கு நீதி வழங்குவதற்காக தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை பாதுகாப்பு அரணாகக் கொண்டு, எந்தப் பாதுகாப்பும் இல்லாத, நிராயுதபாணியாக நின்ற வழக்கறிஞரை ‘நீ ஒரு கோழை’ என பகிரங்கமாக வசவு பேசியிருப்பது நீதிமன்றத்தின் மாண்புக்கு தீராகளங்கம் ஏற்படுத்திய செயலாகும்.
தன் மீதான குற்றச்சாட்டு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில், தானே அதை விசாரிக்க முனைந்துள்ளார். அத்துடன், புகார் கூறியுள்ள வழக்கறிஞருக்கு அழைப்பாணை அனுப்பி நீதிமன்ற அவமதிப்பு ஆளாக்கப்படுவீர் என மிரட்டும் தரம் தாழ்ந்த செயலில் ஈடுபட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர், அவருக்கு எதிரான வழக்கை அவரே விசாரித்து தீர்ப்பு தர முற்படுவது பெரும் அநீதியாகும். உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பிய புகார், யார் மூலமாக, எவ்வாறு சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது என்று விசாரித்து கண்டறிய வேண்டும்.
ஆட்சேபனைக் குரலை சட்டபூர்வமாக எழுப்பியதே குற்றம் என சித்தரித்து அதிகாரத்தை பயன்படுத்தி அடக்க முயலும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் அதிகார அத்துமீறலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கடுமையாக கண்டிக்கிறது.
உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலையிட்டு, வரும் திங்கள் அன்று நடத்த இருக்கும் விசாரணையை தடுப்பது அவசியமாகும் என வலியுறுத்துகிறது. உச்ச நீதிமன்றமும், தன்னிடம் நிலுவையில் இருக்கும், வழக்கை விரைந்து விசாரித்து, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.