சென்னை: உயர்கல்வித்துறையை சீரழித்தது தான் திமுக அரசின் சாதனை என்றும் தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டுமானால் திமுக அரசை அகற்றி விட்டு, உயர்கல்வி மீது அக்கறை கொண்ட அரசை அமைக்க வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஜூன் மாதம் நிறைவடைய வேண்டிய மாணவர் சேர்க்கை செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருக்கும் போதிலும், நான்கில் ஒரு பங்கு இடங்கள் நிரம்பாமல் காலியாக கிடக்கின்றன. தனியார் கல்லூரிகளில் போட்டிப் போட்டுக் கொண்டு சேரும் மாணவர்கள், அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 15 கல்லூரிகள் புதிதாகத் தொடங்கப்பட்ட நிலையில், மொத்தமுள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது. அந்தக் கல்லூரிகளில் ஒட்டு மொத்தமாக 1.26 லட்சம் மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ளன. அவற்றுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் கடந்த மே 7 ஆம் நாள் தொடங்கின.
ஜூன் மாதமே மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு நிறைவடைந்து விட்ட நிலையில், மாணவர் சேர்க்கை இடங்கள் நிரம்பாமல் இருந்ததால் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் கூட இதுவரை 96 ஆயிரம், அதாவது 76.2% இடங்கள் மட்டும் தான் நிரம்பியுள்ளன. மீதமுள்ள மாணவர்கள் அனைவரும் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து விட்டதால் அரசு கல்லூரிகளில் மீதமுள்ள 30 ஆயிரம் இடங்கள் நிரம்புவதற்கு வாய்ப்பே இல்லை என்பது தான் உண்மை.
தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 25% இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது இதுவே முதல்முறையாகும். திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதை புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன.
தமிழ்நாடு அரசே வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிப்படையில் 2022-23 ஆம் ஆண்டில் 170 அரசுக் கல்லூரிகளில் இளநிலை முதலாம் ஆண்டில், ஒரு லட்சத்து 8,748 மாணவர்கள் சேர்ந்தனர். அதற்கு அடுத்த ஆண்டில் 171 கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 5,258 ஆகக் குறைந்தது.
அதற்கு அடுத்த ஆண்டில், 172 அரசுக் கல்லூரிகளில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 98,885 மாணவர்கள் மட்டும் தான். நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை மேலும் குறைந்து 96,000 ஆக குறைந்திருப்பது உயர்கல்வித்துறையின் வீழ்ச்சியை மெய்ப்பிக்கிறது.
அதேநேரத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. 2023-24ஆம் ஆண்டில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளின் முதலாம் ஆண்டில் ஒரு லட்சத்து 94,306 பேர் சேர்ந்திருந்தனர். கடந்த ஆண்டில் அது 2 லட்சத்து 53,528 ஆக அதிகரித்திருக்கிறது. நடப்பாண்டில் தனியார் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை 2.60 லட்சத்தைக் கடந்து அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் பத்தாண்டுகளுக்கு முன் வெறும் 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தான் இருந்தன. அவற்றில் 2015-16ஆம் ஆண்டில் 76,973 மாணவர்கள் முதலாம் ஆண்டில் சேர்ந்தனர். இப்போது அரசு கல்லூரிகளின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ள நிலையில், மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்து 66,929 ஆக உயர்ந்திருக்க வேண்டும்.
ஆனால், கிட்டத்தட்ட அதில் பாதி அளவுக்குத் தான் மாணவர்கள் சேர்ந்திருக்கின்றனர் என்பதிலிருந்தே அரசு கலைக் கல்லூரிகள் சீரழிந்துள்ளன என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். உயர்கல்வி நிறுவனங்களின் சீரழிவுக்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
அரசு கலைக்கல்லூரிகளின் சீரழிவுக்கான காரணங்களைக் கண்டறிய ஆராய்ச்சிகள் எதுவும் தேவையில்லை. தமிழ்நாட்டில் உள்ள 180 அரசு கலைக்கல்லூரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இரு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாகக் கிடக்கும் முதல்வர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
அதேபோல், மொத்தமுள்ள சுமார் 10,500 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் சுமார் 9000 பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசு கல்லூரிகளில் பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர்களே இல்லாத நிலையில், அரசு கல்லூரிகளில் தங்களின் பிள்ளைகளைச் சேர்க்க எந்த பெற்றோர் முன்வருவார்கள்? என்பதை அரசு தான் விளக்க வேண்டும்.
சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை, பள்ளிக்கல்வியை தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் கூட பட்டப்படிப்பை அரசு கல்லூரிகளில் தான் படிக்க விரும்புவார்கள். அதற்குக் காரணம் அரசு கலைக் கல்லூரிகளில் கல்வித்தரம் சிறப்பாக இருக்கும் என்பதும், கல்வி உதவித் தொகையுடன் இலவசக் கல்வி வழங்கப்படும் என்பதும் தான்.
ஆனால், இப்போது லட்சக்கணக்கில் கல்விக் கட்டணம் செலுத்தினால் கூட பரவாயில்லை என்று, இலவசக் கல்வி வழங்கும் அரசுக் கல்லூரிகளை விடுத்து, தனியார் கலைக் கல்லூரிகளை நோக்கி மாணவர்கள் செல்லும் அளவுக்கு அரசு கல்லூரிகள் சீண்டத்தகாதவையாக மாறி உள்ளன. அரசு கல்லூரிகளை இப்படி சீரழித்ததற்காக தமிழக ஆட்சியாளர்கள் தலை குனிய வேண்டும்.
அரசின் உயர்கல்வி நிறுவனங்கள் வலிமையாக இல்லாவிட்டால், தமிழககத்தின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் வேகமாகக் குறையும். ஆனால், இதையெல்லாம் உணரும் மனநிலையோ, சீரமைக்கும் திறனோ விளம்பரத்தில் திளைக்கும் திராவிட மாடல் அரசுக்கு இல்லை.
தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டுமானால் திமுக அரசை அகற்றி விட்டு, உயர்கல்வி மீது அக்கறை கொண்ட அரசை அமைக்க வேண்டும். அந்தப் பணியை மக்கள் ஆதரவுடம் பா.ம.க. செய்து முடிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.