சென்னை: உபரி வருவாய் ஈட்டுவது குறித்து உத்தரப் பிரதேசம், குஜராத் மாநிலங்களை பார்த்து தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் இந்தியத் தலைமைக் கணக்காயர் அலுவலகம் நாட்டில் உள்ள மாநிலங்களில் வருவாய் உபரி ஈட்டியது தொடர்பாக ஓர் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் பாஜக ஆட்சி நடக்கும் உத்தரப் பிரதேசம் முதல் இடத்தையும், திமுக ஆட்சி செய்யும் தமிழகம் 27-வது இடத்தையும் பிடித்திருக்கிறது. மொத்தமுள்ள 28 மாநிலங்களில் கடைசிக்கு முந்தைய இடத்தை பிடித்திருப்பதிலேயே திமுக அரசு எந்த லட்சணத்தில் ஆட்சி நிர்வாகத்தை நடத்துகிறது என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
2013-2014 முதல் 2022-2023 வரையிலான பத்து ஆண்டு காலத்தில் மாநிலத்தின் பொருளாதார நிலை, நிதிப் பற்றாக்குறை, வருவாய் பற்றாக்குறை, பொதுக் கடன் போன்றவற்றின் விவரங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் வாங்கும் கடனில், பெரும் பகுதியை மாநிலத்தின் உட்கட்டமைப்பு வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமல் அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்கப் பயன்படுத்திக்கொண்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
திமுக அரசு மாநிலத்தின் வருவாய்க்குள் செலவைக் கட்டுப்படுத்த முற்றிலுமாக தவறியிருக்கிறது. உதாரணமாக, 2022-2023-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசம் உபரி வருவாயாக ரூ.37,000 கோடி, குஜராத் ரூ.19,865 கோடி ஏற்படுத்தி முன்னணியில் இருக்கிறது. அதே நேரத்தில், தமிழகம் ரூ.36,215 கோடி வருவாய் பற்றாக்குறையில் இருக்கிறது. இந்த குறியீடு முற்றிலுமாக ஓர் அரசு இயந்திரம் எவ்வளவு மோசமாக நடந்துகொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாகப் படம் போட்டுக் காட்டுகிறது.
பொதுவெளியில் பொய் பேசும் ஸ்டாலினின் திமுக அரசு, வருவாய் உபரி ஈட்டுவது தொடர்பாக உத்தரப் பிரதேசம், குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.