சென்னை: உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பேரூராட்சியில் சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் தொழில் வரி ஆகியவை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்கேற்ப சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டுவதில் தாமதம் மற்றும் அங்கு நிலவும் சுகாதார சீர்கேடுகளால், சிகிச்சை பெறும் உள்நோயாளிகள் மற்றும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் மிகுந்த அவதியுறுகின்றனர். இதனால் ஏழை, எளிய நோயாளிகள் வேறு மருத்துவமனைகளுக்கு செல்லும் அவலம் தொடர்கிறது.
உத்திரமேரூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் சரியான முறையில் செயல்படாததால், விவசாயிகள் கொண்டுவரும் நெல் மூட்டைகளைக் கொள்முதல் செய்வதில் தாமதம் மற்றும் நெல்லுக்கான தொகையும் காலதாமதமாக வழங்கப்படுகின்றன. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
உத்திரமேரூர் பகுதி வாழ் மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாமல் வேடிக்கை பார்த்து வரும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்நிலையில், உத்திரமேரூர் பேரூராட்சி மற்றும் திமுக அரசை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் ஜூலை 17-ம் தேதி காலை 10 மணிக்கு, உத்திரமேரூர் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கட்சியின் இலக்கிய அணிச் செயலாளர் வைகைச்செல்வன் தலைமையிலும்; காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ஏ.சோமசுந்தரம் முன்னிலையிலும் நடைபெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.