தமிழக மக்களை திமுக-வுக்கு ஆதரவாக திரட்டுவதைக் காட்டிலும் திமுக-வினரை ஒற்றுமைப்படுத்தி ஒன்றாக உட்காரவைப்பதே திமுக தலைமைக்கு பெரிய தலைவலியாக இருக்கும் போலிருக்கிறது. நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக-விலும் தலைமைக்கு அப்படியொரு தலைவலி தான்!
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரான ராஜேஸ்குமார் எம்பி-க்கும் முன்னாள் மாவட்டச் செயலாளரும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான காந்திச்செல்வனுக்கும் அவ்வளவாய் ஒத்துப்போவதில்லை. இவர்களுக்கு இடையில் நடக்கும் ஈகோ யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர களமிறங்கிய உதயநிதி ஸ்டாலின், அண்மையில் ராஜேஸ்குமாரிடம் காந்திச் செல்வனை அரவணைத்துச் செல்லும்படி சொன்னதாகவும், ஆனால், அதன் பிறகும் அவர் அலட்டிக்கொள்ளவில்லை என்றும் நாமக்கல் திமுக வட்டாரத்தில் சொல்கிறார்கள்.
இது தொடர்பாக அண்மையில் நாமக்கல் வந்த உதயநிதியை தனது ஆதரவாளர்கள் புடைசூழ சென்று சந்தித்த காந்திச்செல்வன், தனது ஆதங்கத்தை அவரிடம் கொட்டித் தீர்த்ததாகவும் சொல்கிறார்கள்.
ஒருங்கிணைந்த நாமக்கல் மாவட்டச் செயலாளராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தவர் காந்திச்செல்வன். 10 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட திமுக இரண்டாகப் பிரிக்கப்பட்ட போது கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார் காந்திச்செல்வன். அதன் பிறகு தலைமைக்கு ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக காந்திச்செல்வனை எடுத்துவிட்டு அவரது விசுவாசியான பார்.இளங்கோவனை மாவட்டச் செயலாளராக்கினார்கள்.
அவரும் ஓராண்டு கூட நீடிக்கவில்லை. மீண்டும் காந்திச்செல்வனே கிழக்கு மாவட்டப் பொறுப்பாளரானார். மீண்டும் என்ன நடந்ததோ தெரியவில்லை காந்திச்செல்வனை நீக்கிவிட்டு மாவட்ட இளைஞரணி செயலாளராக இருந்த கே.ஆர்.என்.ராஜேஸ்குமாரை மாவட்டச் செயலாளராக்கினார்கள். அதனைத் தொடர்ந்து, இரண்டு முறை ராஜ்யசபாவுக்கும் அனுப்பப்பட்டார் ராஜேஸ்குமார்.
இதனால் ஏற்பட்ட வருத்தத்தில் காந்திச்செல்வன் கட்சி நடவடிக்கைகளை விட்டு ஒதுங்கினார். இந்தச் சூழலில் தான் அவரை மீண்டும் ஆக்டீவ் அரசியலுக்குள் கொண்டுவர நினைத்த உதயநிதி, அவரை அரவணைத்துச் செல்லும்படி ராஜேஸ்குமாருக்கு அட்வைஸ் செய்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், ஒன்றுக்கு மூன்று முறை அவர் அழுத்திச் சொல்லியும் ராஜேஸ்குமார் அலட்டிக்கொள்ளாமல் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இது பற்றி நம்மிடம் பேசிய நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் சிலர், “முன்னோடுவதுதானே பின்னோடும். 1997-ல் தான் சேலம் மாவட்டத்திலிருந்து நாமக்கல் மாவட்டம் தனியாக பிரிந்தது. அப்போது கேகேவீ என்று சொல்லப்படும் கே.கே.வீரப்பன் தான் நாமக்கல் மாவட்ட திமுக செயலாளராக இருந்தார். அவரிடம் அரசியல் படித்த காந்திச்செல்வன், பிற்பாடு மாவட்டச் செயலாளராக வந்தார். அப்போது மாநில இளைஞரணி செயலாளராக இருந்த ஸ்டாலின், காந்திச்செல்வனுக்கு ஆதரவாக இருந்தார். தன்னை ஓரங்கட்டிய அதிருப்தியால் கேகேவீ காங்கிரஸில் இணைந்தார்.
ஆனால், அங்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விலகிய அவர், மீண்டும் திமுக-வுக்கு வர தயாராக இருந்தார். தலைமையும் அவரை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருந்தது. ஆனால், காந்திச்செல்வன் தரப்பு அவரை வரவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டது. இப்போது வரலாறு திரும்பி இருக்கிறது. அன்றைக்கு காந்திச்செல்வன் தரப்பினர் கேகேவீக்கு செய்ததை இப்போது காந்திச்செல்வனுக்கு ராஜேஸ்குமார் தரப்பினர் செய்கிறார்கள். அதனால் உதயநிதியே சொல்லியும் அவரால் திமுக-வுக்குள் அதிகாரம் செய்யமுடியவில்லை” என்றனர்.
ராஜேஸ்குமார் ஆதரவாளர்களோ, “காந்திச்செல்வனை அண்ணன் (ராஜேஸ்குமார்) ஒருபோதும் புறக்கணிக்கவில்லை. அவரது மகன் திருமணத்துக்குக்கூட நேரில் சென்று வாழ்த்திவிட்டுத்தானே வந்தார். அதேபோல், அவரை அரவணைத்துச் செல்லும்படி அண்ணனுக்கு உதயநிதி எந்த ஆலோசனையும் வழங்கியதாகவும் தெரியவில்லை” என்கிறார்கள்.
இதுதொடர்பாக காந்திச்செல்வனிடம் கேட்டதற்கு, “ராஜேஸ்குமாரிடம் துணை முதல்வர் கூறியது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியவில்லை” என்றதோடு முடித்துக் கொண்டார்.லட்சம் பேரை நிற்கவைத்து நீதிக் கதை சொல்லும் திமுக-வினருக்கு ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற கதை மட்டும் தெரியாமலா இருக்கும்?