தென்காசி: தென்காசி அருகே கீழபாட்டாகுறிச்சியில் உள்ள முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக 3 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அந்த இல்லத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் அருகே கீழபாட்டாகுறிச்சியில் அன்னை முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தை ராஜேந்திரன் என்பவர் நடத்தி வருகிறார். இங்கு சுமார் 60 பேர் தங்கியிருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உணவு சாப்பிட்ட முதியோர் சிலருக்கு உணவு ஒவ்வாமை காரணமாக திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக, அவர்களில் 11 பேர் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், வியாழக்கிழமை செங்கோட்டையைச் சேர்ந்த சங்கர் கணேஷ் (48), அம்பிகா (40), சொக்கம்பட்டியைச் சேர்ந்த முருகம்மாள் (45) ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, முதியோர் இல்லத்தில் உணவு சாப்பிட்ட அனைவரும் மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர்.
உடல்நிலை பாதிப்பு அதிகம் உள்ள 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று (ஜூன் 13) காலையில் மதுரையைச் சேர்ந்த தனலெட்சுமி (70) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 8 பேர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். முதியோர் இல்லத்தில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த், தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா, மாவட்ட சுகாதார அலுவலர் கோவிந்தன், உணவு பாதுகாப்பு அதிகாரி புஷ்பராஜ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
உணவு பொருட்கள், உணவு மாதிரிகள், குடிநீர் சேகரித்து, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதித்த பிறகே ஒவ்வாமை ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பது தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர். முதியோர் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சாம்பவர்வடகரை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்னர். முதியோர் இல்ல நிர்வாகி தென்காசியைச் சேர்ந்த ராஜேந்திரனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், முதியோர் இல்லத்துக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர்.
சிகிச்சை பெற்று வருபவர்கள் பூரண குணமடைந்ததும் வேறு காப்பகங்களுக்கு அனுப்பிவைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சிகிச்சை பெற்று வரும் முதியவர் ஒருவர் கூறும்போது, “கடந்த ஞாயிற்றுக்கிழமை முதியோர் இல்லத்துக்கு ஒருவர் ஆட்டிறைச்சி வழங்கினார். அதனை சமைத்து சாப்பிட்டதில் இருந்து பலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நிலையில், உடல்நிலை பாதிப்பு அதிகமானதால் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோம்” என்றனர்.