சென்னை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதற்கு, அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்: தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்கு இச்சம்பவம் உதாரணம். காவல் துறையினருக்கே பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், சட்டம்- ஒழுங்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: தமிழகத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. இந்த வழக்கில் முறையான விசாரணை நடத்தவும், குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் திமுக அரசு முன்வர வேண்டும்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: அனைத்துப் பிரிவினரையும் அவதிக்குள்ளாக்கும் திமுக ஆட்சி எப்போது முடியும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த எதிர்பார்ப்பு நிறைவேறும்.
பாமக தலைவர் அன்புமணி: காவல் துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை. சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்தி, மக்களிடம் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தத் தவறியதற்காக மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இதேபோல, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்டோரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.