மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியை ஒருவர் பிரம்பால் அடித்ததில் மாணவர்கள் காயமடைந்தனர். இதனால் பள்ளி செல்ல மறுத்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அரசு தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 200 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளியில் 5 கி.மீ. தொலைவிலுள்ள மின்னாம்பட்டி கிராமத்திலிருந்து 80 பேர் படிக்கின்றனர். இப்பள்ளியிலுள்ள ஆசிரியை ஒருவர் மின்னாம்பட்டி மாணவ, மாணவியரை தொடர்ந்து பிரம்பால் அடித்ததாக புகார் எழுந்தது. இதனால் இன்று பள்ளி செல்ல மாணவர்கள் மறுத்துள்ளனர்.
மேலும், பெற்றோர் காரணம் கேட்டபோது சட்டையை கழற்றி காட்டியதில் முதுகில் பிரம்பால் அடித்த தழும்பை காண்பித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஊர் மந்தையில் தர்ணாவில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த தலைமை ஆசிரியர் வகுப்பு ஆசிரியர்களுடன் சென்று பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் பெற்றோர்களுக்கு உறுதி அளித்துள்ளார்.