சென்னை: அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியோ, சந்தேகமோ தேவையில்லை. உங்கள் எதிர்காலம் நான்தான். உங்களின் நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன் என்று தொண்டர்களுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் எழுதியுள்ள கடிதம்: தமிழகத்தில் சமூகநீதியின் அடையாளமாகவும், அனைத்து தரப்பு மக்களின் பாதுகாவலனாகவும் திகழும் பாமக வரும் ஜூலை 16-ம் தேதி 36 ஆண்டுகளை நிறைவு செய்து, 37-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. பாமகவின் துணை இல்லாமல், மக்களுக்கான எந்த நியாயமும், மத்தியிலோ, மாநிலத்திலோ இதுவரை யாராலும் பெற்று தரப்படவில்லை என்ற ஒன்றே போதுமானது.
மக்கள் நலன்சார்ந்து எப்போதும் யாரையும் எதிர்த்து நிற்கிற கட்சியாக பாமக இருந்து வருவதை நினைத்து பெருமையடைகிறேன். அரசியல்ரீதியாக மட்டுமல்ல, சட்டரீதியாகவும், சமூக வலைதளங்கள், ஊடகங்கள், திரளான மக்கள் போராட்டத்தின் மூலமாக எனக்கு போராட தெரியும். நியாயம் பெற்றுத்தரவும் முடியும். எப்போதும்போல துடிதுடிப்புடன் உங்கள் ஒவ்வொருவரின் குரல்களையும் நான் உள்வாங்கி கொண்டுதான் இருக்கிறேன்.
இதுவரை நாம் கடந்து வந்த 36 ஆண்டுகளைவிட, இந்த 37-ம் ஆண்டு பல புதிய அனுபவங்களை கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. இனி நமக்கெல்லாம் பொற்காலம்தான். உங்கள் வீடுகள், அலுவலக முகப்புகளில் பாமகவின் கொடிகளை ஏற்றுங்கள். ஏழை மக்களுக்கு சட்டஉதவியும், மருத்துவ உதவியும், கல்வி உதவியும் செய்வதில் முதன்மையான நபர்களாக இருங்கள். உங்களின் உற்சாகக் குரலே என்னை புதுப்பிக்கிறது. உற்சாகப்படுத்துகிறது.
எதிரே எத்தனைபேர் என்று கணக்கு வைத்து கொள்ளாமல் மோதிப் பார்க்க சொல்கிறது. எதிர்க்க இளைஞர்களை மட்டுமே மனசு எதிர்பார்க்கிறது. பாட்டாளி சொந்தங்களின் நெடுநாள் கனவைநிறைவேற்ற எனக்குள் புதுரத்தம் பாய தொடங்கி இருக்கிறது. அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியோ, சந்தேகமோ பாட்டாளி சொந்தங்களுக்கு தேவை இல்லை. உங்கள் எதிர்காலம் நான்தான். உங்களின் நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன். போர்க்குணமுள்ள சிங்கத்தின் கால்களும்பழுதுபடாது, அதன் சீற்றமும் குறையாது. மக்களுக்காக கொடுக்கும் அதன் கர்ஜனையும் மாறாது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
டிஜிபியிடம் புகார்: தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் மற்றும் முகநூல் கணக்குகளை அன்புமணி ஆதரவாளர்கள் முடக்கி வைத்திருப்பதாக டிஜிபி சங்கர் ஜிவாலிடம் ராமதாஸ் புகார் மனு அளித்துள்ளார். அதில், சமூகவலைதள கணக்குகளின் கடவுச்சொற்கள் மாற்றப்பட்டுள்ளன, மேலும் அந்த கடவுச்சொற்களை மீட்டெடுக்க தேவையான தகவல்கள் வேறொருவருக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.