சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் மூலம் இதுவரை 12.65 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. முகாம்களில் மகளிர் உரிமைத் தொகை கோரி 5.88 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
முதல்வரின் முகவரி, மக்களுடன் முதல்வர் உள்ளிட்ட திட்டங்களைத் தொடர்ந்து, அரசின் சேவைகளை பொதுமக்கள் வசிப்பிடத்திலேயே சென்று வழங்கும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை கடந்த ஜூலை 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார்.
அரசுத் துறை சேவைகள்: இத்திட்டத்தின்படி, பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் முகாம் நடைபெறுவது தொடர்பாக முன்னரே தன்னார்வலர்கள் மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு, அவர்கள் விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டிய ஆவணங்கள் குறித்த விவரங்களும் வழங்கப்படுகிறது.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் நகர்ப்புறப் பகுதிகளில் 13 அரசுத் துறைகளின் 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்படுகின்றன.
45 நாட்களில் தீர்வு: இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்களின் மீது, அதிகபட்சமாக 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்புகைச் சீட்டு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, சுகாதாரம் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மாற்றுத் திறனாளிகள் நலன் உள்ளிட்ட 13 அரசுத் துறைகள் மூலம் மக்களிடமிருந்து மனுக்கள் பெற்று உரிய பதிவுகளை மேற்கொண்டு அதற்கான ஒப்புகைச்சீட்டும் வழங்கப்படுகிறது.
மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறதகுதியுள்ள விடுபட்ட மகளிர் இந்த முகாமில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர். அந்த வகையில், இதுவரை முகாம்கள் மூலம் 12.65 லட்சம் மனுக்கள் பெறப்
பட்டுள்ளன. மகளிர் உரிமைத் தொகை கோரி 5.88 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.