சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 10 ஆயிரம் முகாம்களையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்கும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டம் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நகர்புறப் பகுதிகளில் 3,768, ஊரகப் பகுதிகளில் 6,232 என 10 ஆயிரம் முகாம்கள் நடைபெற உள்ளன.
அத்துடன் முகாம்களுக்கு வருகைதரும் பொதுமக்களின் உடல்நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு, ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டுமே விண்ணப்பங்கள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் கடந்த 7-ம் தேதி முதல் ஒவ்வொரு வீட்டுக்கும் தன்னார்வலர்கள் நேரடியாகச் சென்று, முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள், சேவைகளை விவரித்து, அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டையும், விண்ணப்பத்தையும் வழங்கி வருகின்றனர்.
இத்தகைய முக்கிய சேவைகள் வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை, வரும் 15-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிதம்பரத்தில் தொடங்கி வைக்கவுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து 14-ம் தேதி மாலை ராமேசுவரம் விரைவு ரயில் மூலமாக முதல்வர் சிதம்பரம் செல்கிறார்.
மறுநாள் 15-ம் தேதி முகாமை சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைப்பதோடு, 15 மற்றும் 16-ம் தேதிகளில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கள ஆய்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி முடிவுற்ற பணிகளை முதல்வர் திறந்து வைக்கிறார். அத்துடன் புதிய திட்ட பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்: இதற்கிடையே, முதற்கட்டமாக ஜூலை 15 முதல் ஆக.15-ம் தேதி வரை நடைபெறவுள்ள 3,570 முகாம்களுக்கான பணிகளின் முன்னேற்றம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளை, பொதுமக்களின் இருப்பிடத்துக்கு அருகிலேயே பெற்றுக்கொள்ள வசதியான அரசின் மிக முக்கியமான முன்னெடுப்பு இத்திட்டம். எனவே, இந்த முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது சரியான தீர்வை வழங்கும் வகையில் அர்ப்பணிப்பு உணர்வுடன் அனைவரும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், முதல்வரின் முகவரித் துறை செயலர் பெ.அமுதா, நிதித் துறைச் செயலாளர் த.உதயச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முகாம்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது சமூக வலைதள பக்கத்தில், “பொதுமக்கள் குறைகளைத் தீர்க்க அரசு அலுவலர்கள் வீடுகளுக்கே வந்து மனுக்களைப் பெறுவதோடு, நடைபெறவுள்ள 10,000 ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் ஊரகப் பகுதிகளில் 46 சேவைகளும், நகர்ப்புறப் பகுதிகளில் 43 சேவைகளும் வழங்கப்பட உள்ளன. பொதுமக்கள் அனைவரும் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார். இந்த முகாம்கள் நவம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.